சிவகங்கை அருகே பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை.. அடுத்தடுத்து 3 கொலைகள்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு!
சிவகங்கை: சிவகங்கை அருகே பாஜக மாவட்ட நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடலூரில் அதிமுக பிரமுகர், திருவட்டாறில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர், சிவகங்கையில் பாஜக நிர்வாகி ஆகியோர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தை அதிர வைத்துள்ளன.
சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். பாஜக கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த ஒரு மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியது.

அந்த வழியாக வந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், செல்வக்குமாரை பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் மற்றம் பாஜகவினர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்.பி டேங்கரே பிரவீன் உமேஷ், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மூன்று நாட்களில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடைபெற்ற சம்பவம் சிவகங்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் வெவ்வேறு இடங்களில் 3 அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். கடலூர் திருப்பனம்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகர் பத்மநாதன், திருவட்டாறில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஜாக்சன், சிவகங்கையில் பாஜக நிர்வாகி செல்வக்குமார் ஆகியோர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தை அதிர வைத்துள்ளன.












Click it and Unblock the Notifications