2016ல் அதிமுக அறிவித்த செல்போன் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? எடப்பாடிக்கு ஸ்டாலின் கேட்ட கேள்வி!
சிவகங்கை: 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதிகளையும் அதிமுக நிறைவேற்றவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ரேஷன் கார்டுகளுக்கான செல்போன் அளிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பழனிசாமி, அடுத்த வாக்குறுதிகளை கொடுப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின், காரைக்குடியில் சட்டக் கல்லூரியையும் தொடங்கி வைத்திருக்கிறார். அதேபோல் பல்வேறு புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதன்பின் காரைக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மத்திய அரசால் மதுரை எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் சட்டக்கல்லூரி, நியோ டைடல் பார்க் உள்ளிட்டவற்றை சிவகங்கையில் நாம் உடனடியாக கட்டி முடித்து திறந்து வைத்துவிட்டோம்.
அடுத்தும் திராவிட மாடல் ஆட்சி வருவது நிச்சயம். அப்போதும் வரிசையாக திறப்பு விழா காண்பதற்கான பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். அதனை நிச்சயமாக நானே திறந்து வைப்பேன். மத்திய அரசு சொல்லும் புள்ளி விவரங்களை வைத்தே தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்று சொல்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை விமர்சிக்கும் ஆளுநர் மத்திய அரசை தான் கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியும் தேர்தலுக்காக பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேசிவிட்டு சென்றுள்ளார். மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டை பாராட்டி இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு, உற்பத்தி துறையில் தமிழ்நாட்டை பாராட்டியுள்ளனர். இந்த அறிக்கையை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்க முடியாத 10 தோல்வி பழனிசாமி, திமுக அரசு செய்து கொண்டிருக்கிற திட்டத்தையே காப்பியடித்து புதிய வாக்குறுதிகள் என்று அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார். அவர் ஆட்சிக்கு வரப் போவதில்லை.. ஏற்கனவே அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறிய எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. 2011 தேர்தல் வாக்குறுதியில் சென்னை - குமரி வரை கடலோர சாலை திட்டம் என்று சொன்னார்கள்.
தென் தமிழ்நாட்டில் ஏரோ பார்க் என்று சொன்னார்கள்.. 58 வயதிற்கு மேற்பட்டவர்களை எல்லாம் இலவச பஸ் பாஸ் என்று சொன்னார்கள். 2016ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதியாவது நினைவிருக்கிறதா? அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச செல்ஃபோன் அறிவித்தீர்களே? கொடுத்தீர்களா? பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில் இலவச வைபை வசதி என்று கூறினீர்களே.. செய்தீர்களா?
அதனை பற்றி பேச்சு, மூச்சே இல்லையே.. அனைத்து ஊராட்சிகளிலும் இலவச வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம் என்று கூறினார்கள். இது அவர்களுக்கே மறந்து போயிருக்கும்.. அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை செய்ய மாட்டார்கள் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது. மகளிர் உரிமை தொகை, கட்டணமில்லா பேருந்து திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications