மானாமதுரை கைதி ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! உறவினர்கள் தொடர் மறியல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸார் அடித்துக் கொன்றதால் கைதி ஆகாஷ் இறந்ததாக கூறி, ராமேஸ்வரம் சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது இறப்பு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மானாமதுரையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்த இருவரை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பிய ஆகாஷ் அங்கிருந்த பாலத்தில் குதித்து தப்ப முயன்ற போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நன்றாக பேசிக் கொண்டிருந்த ஆகாஷ் திடீரென எப்படி உயிரிழப்பார் என கேட்டு நேற்று மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக விடிய விடிய உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஆகாஷை போலீஸாரே அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டினர்.
"எங்களிடம் இருந்து தப்ப முயன்ற போது அவர் பாலத்தில் இருந்து விழுந்து காயமடைந்தார்" என விளக்கமளித்தும் அதை உறவினர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு கைதி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications