தோல்வி பயமா? இது திமுக ஆட்சியின் முதல் இடைத்தேர்தல்..அரசு சும்மாவா இருக்கும்? ப சிதம்பரம் ஓபன் டாக்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக சார்பில் தேர்தல் பணிக்குழுவில் 11 அமைச்சர்கள் செயல்படுவது ஏன்?
சிவகங்கை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி பயத்தில் திமுக அமைச்சர்களின் பெரும்படையை இறக்கியதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‛‛எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. அவர்கள் தைரியமாக போட்டியிட வேண்டியது தானே.தமிழ்நாட்டில் ஆளும் கட்சி சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். அரசாக இருக்கும் ஆளும் கட்சி சும்மாவா இருக்கும்?'' என பெரும்படையை இறக்கியதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவரொவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்பட 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்புமனுக்களை வாபஸ் வாங்க இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் இன்று மாலையில் முழு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதன்பிறகு 27ம் தேதி ஓட்டுப்பதிவும், மார்ச் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

காங்கிரஸ்-அதிமுக இடையே கடும் போட்டி
இந்த தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் தனது மனுவை வாபஸ் பெறுகிறார். இந்த தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் கூட நேரடியான போட்டி என்பது காங்கிரஸ், அதிமுக இடையே தான் நிலவுகிறது. மீண்டும் தொகுதியை தக்க வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. மேலும் தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தயாராகி வருகின்றன.

காங்கிரஸ் தீவிரம்
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியும் தீவிர களப்பணியை தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அக்கட்சி சார்பில் நட்சத்திர பேச்சாளர்களாக 34 பேரை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. இந்த பட்டியலை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டார். அதில் கேஎஸ் அழகிரி, தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்த தலைவர் ப சிதம்பரம், மேலிட இணை பொறுப்பாளர் சிரிவெல்ல பிரசாத், தேசிய செயலாளர் செல்லக்குமார் எம்.பி., மாணிக்க தாகூர் எம்.பி., தமிழ்நாடு சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி. உள்பட 34 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பெரும்படையை இறக்கிய திமுக
மேலும் 2021 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் இடைத்தேர்தல் என்பதால் இது திமுக ஆட்சிக்கு கிடைக்கும் மதிப்பெண்ணாக பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியை விட திமுகவினர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீதிவீதியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். திமுக சார்பில் 11 அமைச்சர்கள் அடங்கிய 30 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்று தீவிரமாக இவிகேஎஸ் இளங்கோவனுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தோல்வி பயத்தால் திமுக போட்டியிடாமல் கூட்டணி தர்மம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளதாகவும், அதோடு தொடர்ந்து மக்கள் மீதான பயத்தால் தான் பெரும்படையை பிரசாரத்துக்கு திமுக இறக்கி உள்ளதாகவும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ப சிதம்பரத்திடம் கேள்வி
இந்நிலையில் தான் சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ப சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் ப சிதம்பரத்திடம் கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தில் ஆளும் திமுக அனைவரையும் அங்கு பணி செய்ய அனுப்பி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனரே?' என கேள்வி கேட்டனர்.

அரசு சும்மாவா இருக்கும்?
‛‛ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்கிறார். அவர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. அவர்கள் தைரியமாக போட்டியிட வேண்டியது தானே. இதில் என்ன குற்றச்சாட்டு சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆளும் கட்சி சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். அரசாக இருக்கும் ஆளும் கட்சி சும்மாவா இருக்கும்?. தனது முழு கட்சி பலத்தையும் காட்டத்தான் செய்வார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் இடைத்தேர்தல் வந்தால் அமைச்சர்கள் அனைவரும் வீட்டிலேவா இருந்தார்கள்?'' என்றார்.

அதிமுக பற்றி ப சிதம்பரம் பதில்
இதையடுத்து, ‛‛அதிமுக விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பை சமரசம் செய்வது போல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதே. அரசியலில் மூத்த தலைவராக இதை எப்படி பார்க்கிறீர்கள்?'' என கேட்கப்பட்டது. அதற்கு ப சிதம்பரம், ‛‛நீதிபதிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் குணச்சித்திரங்கள் தெரியாது. இவர்கள் 2 பேரும் பேசமாட்டார்கள் என்பது தெரிந்திருந்தால் இதனை அவர்கள் சொல்லி இருக்கமாட்டார்கள். அவர்கள் பேசமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். நீதிபதிகளுக்கு தெரியாது அல்லவா.'' என்றார்.

பாஜக நச்சுப்பாம்பை சுமக்கும் அதிமுக
இதன் தொடர்ச்சியாக, ‛‛2024 வரை அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே'' என்ற கேள்விக்கு, ப சிதம்பரம், ‛‛தாராளமாக தொடரட்டும். பாஜக என்ற நச்சுப்பாம்பை கழுத்தில் போட்டு கொண்டு அதிமுக வரட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லையே'' என்றார். இறுதியாக, ‛‛பிரதமர் மோடியின் நண்பர் என நீங்கள் கூறும் அதானியின் விவகாரம் இந்திய பொருளாதாரத்தை பாதிக்குமா?'' என்ற கேள்விக்கு, ‛‛மோடியின் நண்பராக அதானி இருப்பதை அவர் நாடாளுமன்றத்தில் மறுக்கவில்லை. இதனை மறுக்கவும் முடியாது. அதானி விவகாரத்தில் பொருளாதாரத்தை பாதிக்குமா இல்லையா என்பது பற்றி அரசு முதலில் பதில் அளிக்க வேண்டும் அப்போது தான் நான் கருத்து கூற முடியும்'' என்றார்.












Click it and Unblock the Notifications