சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ஏமாற்ற முயன்ற திரைப்பட உதவி இயக்குநர் உட்பட 7 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள 100 அடி சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு திருப்பத்தூர் காந்திபுரத்தைச் சேர்ந்த 43 வயதாகும் நாச்சியப்பன் என்பவர் 2 சங்கிலிகள், 3 மோதிரங்கள், ஒரு டாலர் உள்பட 18 பவுன் தங்க நகைகளை ஆகியவற்றை அடகு வைக்க வந்திருக்கிறார்.

நாச்சியப்பன் கொண்டு வந்த நகை போலி நகை என்று சந்தேகமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி பிரகாஷ், காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவரசு ஆகியோர் நாச்சியப்பனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த நகைகள் அனைத்தும் தங்கம் முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது உறுதியானது.
அவரிடம் போலீசார் விசாரித்த போது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், காரைக்குடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால், சென்னை முகப்பேரைச் சேர்ந்த தமிழ்வாணன், முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ராமசாமி, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பீனு, சுபாஷ்குமார் (எ) கிருஷ்ணா ஆகியோருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ராஜகோபால், தமிழ்வாணன், ராமசாமி, கிருஷ்ணா , பீனு, நாச்சியப்பன் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 18 பவுன் போலி நகைகள், 2 கார்களை பறிமுதல் செய்தார்கள்.
கைதான நாச்சியப்பன் சென்னையில் திரைப்பட உதவி இயக்குநராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் எம்எல்எம்மில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதன் மூலம் பழக்கமானவர்களை வைத்து போலி நகை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் கடந்த 7 ஆண்டுகளாக சென்னை வளசரவாக்கம், வடபழநி, ராமாபுரம், கிண்டி, கே.கே.நகர், ஈக்காட்டுதாங்கல் ஆகிய இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது..
மேலும் நகைகள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க, போலி நகைகளில் 'ஹால்மார்க்' முத்திரையை பதித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தபோது நகைகள் மீது சந்தேகமடைந்த ஊழியர்கள் உரசி பார்த்ததால் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications