அண்ணாமலைக்கு அஷ்டம சனி.. ஜோசியர் ஆலோசனைப்படி பரிகாரம் செய்கிறார்: கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: “அண்ணாமலைக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. விலகும் நேரத்தில் ஆறுபடை வீட்டுக்கு செருப்பு இல்லாமல் நடந்து சென்று வந்து, சாட்டை அடி கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும் என ஜோசியர் கூறியிருப்பார்." என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேசுகையில், “சீமான், ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் இருவரும் பொதுவெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல. இதில் தலைமைச் செயலர், டிஜிபி தலையிட்டு சட்ட ரீதியாவும், நிர்வாக ரீதியாகவும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுவெளியில் கருத்து மோதல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கக் கூடாது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பாஜகவுக்கு இல்லை. இதனால் மசோதா நிறைவேறாது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தால் தான் சிபிஐ விசாரணை கேட்க வேண்டும். இந்த வழக்கில் தேவையில்லை. தொடர் குற்றவாளி எப்படி வெளியே இருந்தார் என்பது தெரியவில்லை. இதில் அவர் தனிநபராக ஈடுபட்டாரா என்பதில் சந்தேகம் உள்ளது. யாரேனும் உடைந்தையாக இருந்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டும்.
ஜோசியர் ஆலோசனைப்படியே அண்ணாமலை பரிகாரம் செய்துள்ளார் என நினைக்கிறேன். அவரது கடக ராசிக்கு அஷ்டம சனி நடக்கிறது. அறுபடை முருகனுக்கு காலனி இல்லாமல் நடந்து, சாட்டையடி கொடுத்தால் நல்லது என்று கூறியிருக்கலாம்.
அரசு பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்த தனியாரிடம் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்கும். கட்டணம் வசூலிக்க கூடாது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது சமுதாய பிரச்சினை. அதற்கு அரசு மீது சாயம் பூச கூடாது. சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்சோ சட்டங்களை சிலர் தவறாக பயன்படுத்தவும் செய்கின்றனர்.
ஒரு காலத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு நிதியமைச்சரின் வயதை தாண்டி விட்டது என்று மோடி கிண்டல் செய்தார். தற்போதைய நிலையில் நிதி அமைச்சரின் தாத்தா வயதையும் டாலர் தாண்டிவிட்டது. பணமதிப்பிழப்பு, குழப்பமான ஜிஎஸ்டி, கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு நிவாரணம் கொடுக்காதது போன்ற காரணங்களால் தான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தை சீர்செய்ய மத்திய அரசுக்கு பக்குவம் போதாது” என்று தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாணவர் ஒருவருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த வெளி நபர் ஒருவர், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் எஃப்.ஐ.ஆர் நகல் கசிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு மற்றும் காவல்துறையை கடுமையாக விமர்சித்ததோடு, “நான் என்னை 6 முறை சாட்டை அடித்துக்கொள்வேன். இனி திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை என் காலில் செருப்பு அணிய மாட்டேன்.” என அறிவித்தார்.
அதன்படி, அண்ணாமலை கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பாக தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். பச்சை வேட்டி கட்டி, வெற்றுடம்போடு, தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார் அண்ணாமலை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், அண்ணாமலை பரிகாரமாக சாட்டையால் அடித்துக் கொண்டிருக்கலாம் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications