ப.சிதம்பரத்துடனான பழைய பகை! சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மகனை களமிறக்கும் யோசனையில் ராஜகண்ணப்பன்!
சிவகங்கை: சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது மகன் திலீப்பை களமிறக்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை காலம் காலமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வரும் தொகுதியாகும். ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்பதால் அவருக்காக இந்த ஒதுக்கீடு நடைபெற்று வந்தது.

ஆனால் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி ராஜ்யசபா உறுப்பினராகிவிட்டதால் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதி எம்.பியானார். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மீண்டும் சிவகங்கை தொகுதியில் களமிறங்கவே காய் நகர்த்தி வருகிறார்.
ஆனால் உள்ளூர் திமுகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். கார்த்தி சிதம்பரம் சற்று தடாலடியாக பேசக்கூடியவர், கடந்த காலங்களில் அவர் பேசிய சில கருத்துக்கள் திமுக தலைமையை சூடாக்கியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல ராகுல்காந்தியுடனும் கார்த்திக்கு சரியான டேர்ம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்ட ராஜகண்ணப்பன் விறுவிறுவென முன்னிலை பெற்ற நிலையில் கடைசியில் ப.சிதம்பரம் வெற்றி என்ற அறிவிப்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜகண்ணப்பன் அப்போது அதிமுகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இப்போது ராஜகண்ணப்பன் திமுகவில் அமைச்சராக இருக்கும் நிலையில் ப.சிதம்பரத்துடனான தனது பழைய பகையை இன்னும் மறக்கவில்லை என்றே தெரிகிறது. அதனால் தான் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தனது மகன் திலீப் கண்ணனை களமிறக்கும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications