பாவங்களை கழுவ பயன்படுத்துங்கள்.. மோடி சோப்பு! தேர்தல் பரப்புரையில் ப.சிதம்பரம் விமர்சனம்
சிவகங்கை: மோடி சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமாகிவிடலாம் என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

1. திருவள்ளூர் (தனி) - சசிகாந்த் செந்தில்
2. கரூர் - ஜோதிமணி
3. விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
4. சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்
5. கன்னியாகுமரி - விஜய் வசந்த்
6. கடலூர் - விஷ்ணு பிரசாந்த்
7. கிருஷ்ணகிரி - கோபிநாத்
8. நெல்லை - ராபர்ட் புரூஸ்
9. மயிலாடுதுறை - சுதா
10. புதுச்சேரி - வைத்தியலிங்கம்
ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் சிவகங்கை வேட்பாளரான, தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "மோடி சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமாகிவிடலாம்" என விமர்சித்திருக்கிறார்.
அதாவது, "பா.ஜ.க.வின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எந்த வழக்கும் கிடையாது, யாரும் சிறையிலும் இல்லை. பா.ஜ.க.வினர் அனைவரும் உத்தமர்கள், எதிர்க்கட்சியினர் எல்லோரும் அயோக்கியர்களா? இங்கிருந்து யாராவது அங்கு சென்றால் மோடி சோப்பு மூலம் சுத்தப்படுத்தி அவர்களை புனிதமாக்குகிறார்களே, அது எப்படி? இந்தியாவிலேயே மிகப் பிரபலமாக அனைவரும் பயன்படுத்தும் சோப்பு மோடி சோப்புதான். அந்த சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமாகிவிடலாம்" என்று கூறியுள்ளார்.
முன்னர் இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ஏர் இந்தியாவுக்கு விமானங்களை குத்தகை எடுத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக அஜித் பவார் அணியை சேர்ந்த பிரபுல் படேல் மீது மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ 2017ல் வழக்குப்பதிவு செய்திருந்தது. ஆனால் பிரபுல் படேல் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து இவர் மீதான வழக்கை சிபிஐ கைவிட்டிருக்கிறது.
அதாவது இது தொடர்பான வழக்கு விசாரணையில், "பிரபுல் படேல் தவறு செய்திருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்று சிபிஐ, நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது. எனவே பிரபுல் படேலுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டிருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஊழலை ஒழிக்கும் வாஷங் மெஷின் பாஜக என்று குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்ச்சியாகவே ப.சிதம்பரம் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications