ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன்
சிவகங்கை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பதை அந்தக் கட்சியினர் வரவேற்று வருகிறார்கள்.
பெரியகருப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் பன்னீர்செல்வத்தை ஸ்டாலினின் இதயக் கனி என்று புகழ்ந்து வருகிறார்கள். செய்தியாளர் ஒருவர் ஓபிஎஸ்ஸிடம் ஏடா கூடமாக எழுப்பிய கேள்விக்கு பெரிய கருப்பன் சட்டென டென்ஷனாகி பதில் அளித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதிமுகவில் அவல நிலை
சிவகங்கையில் திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக 100 ஆண்டுகளுக்கு பிறகும் ஆட்சியில் இருக்கும் என ஜெயலலிதா கூறினார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியடையும். அந்த நிலையை இன்றைக்கு கட்சியை வழிநடத்துவோர் உருவாக்கிவிட்டார்கள்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய கட்சியை இன்றைக்கு அழிவுப் பாதைக்கு தள்ளிவிட்டார்கள். நாங்கள் டெல்லி சென்றால் என்ன தவறு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்கிறார். அம்மா இருந்தபோது டெல்லியில் இருந்து இங்கு வந்து கூட்டணி பேசுவார்கள். இன்றைக்கு இவர்கள் டெல்லி செல்லும் அவல நிலையை இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
போடி தொகுதி
நான் அதிமுகவை விமர்சிப்பது போல பாஜகவை விமர்சிப்பதில்லை என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள் . அந்தக் கட்சி இங்கு எங்கிருக்கிறார்கள். பாஜக தமிழகத்தில் எங்கிருக்கிறது. அவர்களால் தனித்து நின்று தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா" என்று கேட்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் "போடி தொகுதியில் உங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் உங்களின் நிலைமை என்னவாகும்" என்று கேள்வி எழுப்பினார். அப்போது ஓபிஎஸ் பதில் அளிப்பதற்குள் அருகில் இருந்த அமைச்சர் பெரிய கருப்பன் கடுப்பாகி, "ஏங்க.. இது எல்லாம் ஒரு கேள்வியா" என்று சொல்லி மைக்கை தள்ளி பன்னீர்செல்வத்தை அழைத்து சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications