நான் அப்பவே சொன்னேன்ல.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி! மீண்டும் அழுத்திச் சொன்ன எச்.ராஜா
சிவகங்கை : நான் ஏற்கனவே "ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி" என போன வருடமே சொன்னதை தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் நிரூபித்து வருகிறார் என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கூறியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர் என் ரவியின் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து வருகை தந்த ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ் தாய் வாழ்த்துக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கத் தொடங்கினார்.

சட்டசபை கூட்டம்
எதிர்பார்த்தது போலவே ஆளுநரின் தமிழ்நாடு குறித்த பேச்சுக்கு சட்டசபையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் எழுந்ததோடு ஆளுநரின் உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதே நேரத்தில் ஆளுநரின் பேச்சுக்கு இடையே அரசு அளித்திருந்த சில வார்த்தைகளை அவர் தவிர்த்து விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

ஆளுநர் உரை
மேலும் ஆளுநர் தனது போக்குக்கு உரையை வாசித்ததும் கடும் கண்டனங்களை பெற்றது. இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட சபையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் இருக்கும்போதே முதல்வர் பேசியது அவை நாகரிகத்தை மீறியது என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அடுத்தடுத்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் ஆளுநரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவமதித்து விட்டதாக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

எச்.ராஜா
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை குறித்து பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா விமர்சித்திருக்கிறார். ஏற்கனவே தான் கூறியதை தற்போது மீண்டும் அழுத்தி சொல்லி இருக்கிறார் எச். ராஜா. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கும்பாபிஷேக விழா ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," சட்டசபையில் இன்று ஆளுநர் உரையின் போது அவர் மட்டுமே பேச வேண்டும் என்பது மரபு. ஆனால் அதற்கு மாறாக முதல்வர் பேசியது மரபு அல்ல.

புதிதான ஒன்று அல்ல.
இந்த மாதிரி ஏற்கத்தகாத விஷயங்களை ஆளுநர் படிக்காமல் தவிர்ப்பது என்பதும் புதிதான ஒன்று அல்ல. ஏற்கனவே கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இதே மாதிரி ஆளுநர்கள் பேசியுள்ளனர். ஆளுநர் அவர்கள் கரெப்ட் அரசாங்கத்தை பற்றி தனது பேச்சில் கூறாமல் தவிர்த்து விட்டு சென்றதற்கு முதலமைச்சரே ஆளுநருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவ்வையார் பாரதியார் குறித்த கவிதைகளை ஆளுநர் வாசித்தது சபையின் அவை குறிப்பில் இருக்காது என்கிறார்கள் இதுதான் திராவிட மாடல் அமைதி பூங்காவா.

ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ்
நான் ஏற்கனவே "ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி" என போன வருடமே சொன்னதை தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். தமிழ்நாட்டின் ஸ்டாலின் முதிர்வில்லாத முதலமைச்சர் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. தன்னுடைய நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பார். தன்னைத் திருத்திக் கொள்வார் என நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications