அவங்கள சும்மா விடாதீங்க.. எச் ராஜாவை பார்த்ததும் காலில் விழுந்து கதறிய பாஜக பிரமுகரின் தாய்.. சோகம்
சிவகங்கை: சிவகங்கையில் பாஜக பிரமுகர் செல்வக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் வீட்டுக்கு ஆறுதல் கூற சென்ற பாஜக மூத்த தலைவர் எச் ராஜா காலில் விழுந்து செல்வக்குமார் குடும்பத்தினர் கதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் தற்போது தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வரும் சூழலில் தான் கடந்த 21ம் தேதி ஒரே நாளில் அரசியல் கட்சிகளை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டனர். அன்றைய தினம் கடலூர் நகர அதிமுக வட்ட செயலாளரான பத்மநாதன் , கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் உஷாராணியின் கணவர் ஜாக்சன் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு அணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், இளையான்குடி சாலையில் செல்லும் போது மர்ம ஆட்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆளும் திமுகவை விமர்சிக்க தொடங்கினர். மேலும் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார், செங்கல்சூளை நடத்தி வந்தார். இவர் இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து வெட்டி கொன்றது. இந்த வழக்கில் வசந்த் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் வசந்த் போலீசாரிடம் தப்ப முயன்ற நிலையில் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காலில் குண்டுப்பட்டு காயமடைந்த வசந்த் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில் தான் கொலை செய்யப்பட்டு இறந்த பாஜக பிரமுகர் செல்வகுமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற இன்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா நேரில் சென்றார். செல்வகுமாரின் வீட்டுக்கு சென்ற எச் ராஜாவை பார்த்தவுடன் அவருடைய தாயார் அவரது காலில் விழுந்து, ‛‛சார் அவங்களை சும்மா விட்றாதீங்க சார். நான் பெத்த பையனை இப்போது இழந்துட்டு நிக்கிறேனே'' எனக்கூறி கதறி அழுதார். இதை பார்த்த எச் ராஜா எழுந்திறீங்க மா எனக்கூறி ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications