குடிபோதையில் காரை ஓட்டி விபத்து.. போலீசார், செவிலியருடன் தகராறு செய்த விசிக இளைஞரணி செயலாளர்
சிவகங்கை: குடிபோதையில் காரை ஓட்டி சென்று பெட்ரோல் பங்க் மீது மோதிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் விசிக இளைஞரணி செயலாளராக உள்ளார் மோகன் ராஜ்.
இவர் தீபாவளி தினத்தன்று குடிபோதையில் தனது காரை ஓட்டிவந்து அங்கு உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மீது மோதியுள்ளார். நல்வாய்ப்பாகத் தீபாவளி அன்று பெட்ரோல் பங்க் மூடப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதன்பிறகு மோகன்ராஜும் அவருடன் காரில் வந்தவர்களும் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அவர்களைப் பரிசோதித்த அங்கிருந்த செவிலியர், வெளிக்காயம் இல்லை, உள்காயம் ஆக இருக்க வாய்ப்புள்ளதால் காரைக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் மருத்துவமனையிலேயே அந்த செவிலியருடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் பள்ளத்தூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இருப்பினும், காவலர்களுடனும் தகராறு செய்த அவர்கள் இழிவாகவும் பேசியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது வாட்சாப் மற்றும் சமுக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது தொடர்பாக விசிக பிரமுகர் மோகன்ராஜ் மீது பள்ளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தற்போது போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications