ஸ்டைலா.. கெத்தா.. தம் அடித்துக் கொண்டே லஞ்சம் வாங்கி சிக்கிய சிவகங்கை அதிகாரி
சிவகங்கை: அதிகாரிகள் லஞ்சம் கேட்பதும், பிடிபடுவதும் தினசரி நடக்கும் சம்பவங்களாகிவிட்டன. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் தீயணைப்பு துறை அலுவலர் லஞ்சம் பெறும்போது சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அப்படி அவர் என்ன செய்தார். எப்படி சிக்கினார் என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், மாவட்ட தீயணைப்பு துறை துணை அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கோழிப்பண்ணைக்கு தடையில்லா சான்று பெறவந்த கற்பகமூர்த்தி என்பவரிடம் நாகராஜன் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து கற்பகமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகாரளித்துள்ளார்.

போலீஸ் அறிவுறுத்தல்படி, கற்பகமூர்த்தி ரசாயனம் தடவிய பணத்தை நாகராஜிடம் வழங்கியுள்ளார். அதன்பேரில் கற்பகமூர்த்தியிடம் இருந்து நாகராஜன் பணம் பெற்றபோது அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். லஞ்சம் கேட்டதும், போலீஸ் அவருக்கு விரித்த வலையும் வழக்கமான நடைமுறைதான். ஆனால், இந்த விவகாரத்தில் நாகராஜன் சிக்கிய கதை தான் ஹைலைட்.
கற்பகமூர்த்தி பின்னணியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இருப்பது நாகராஜ்க்கு தெரியவில்லை. தனக்கு போடப்பட்டிருக்கும் ஸ்கெட்ச் குறித்தோ லஞ்சம் வாங்குகிறோம் என்று பயம் கொஞ்சமும் இல்லாமல் நாகராஜ் பந்தாவாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். இந்தக் காட்சிகளை லைவாக வீடியோ எடுத்துள்ளனர். நாகராஜனை சிக்க வைப்பதற்காக பணம் கொடுத்துவிட்டு, "எவ்வளவு நாள்ல கிடைக்கும்." என்று கேட்கிறார்.
அதற்கு நாகராஜ் தம் அடித்துக் கொண்டே, "இந்த வாரத்துலயே வாங்கிக்கலாம். நாளைக்கு வியாழக்கிழமை.. அப்பறம் வெள்ளிக்கிழமை.. நீங்க திங்கள் கிழமை வாங்கிக்கலாம்." என்று கூறுகிறார்.
மேலும் நாகராஜனுன் அருகில் இருந்த மற்றொரு அதிகாரி, "மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராம்நாட்டில் இருக்கிறார். வாரம் 2 நாட்கள் அங்கு சென்றுதான் கையெழுத்து வாங்கி வருகிறோம்." என்று கூறுகிறார். தம் அடித்துக் கொண்டே பேசிய நாகராஜன், "நேற்று ஒருத்தர் ரூ. 20,000 கொடுத்தார். 15,000 அங்க கொடுத்துட்டு, நாங்க 5 பேர் ஆளுக்கு 1,000 பிரிச்சுக்கிட்டோம்." என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்.
முதல் கட்டமாக அந்த இடத்தை பார்வையிட்டு ரூ.1,000 லஞ்சத்தை அட்வான்ஸ் வாங்கியுள்ளது குறிப்பித்தக்கது. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ், அவர் கையில் இருந்த சிகரெட் அணைவதற்குள் நாகராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்துவிட்டனர். இந்த வழக்கில் தீயணைப்பு துறையின் மேலும் சில அதிகாரிகள் சிக்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications