பட்டா இருக்கு, ஆனா அரசாங்க நிலம் எங்கே? சிவகங்கையில் நடக்கும் "நில" மர்மம்! குழப்பத்தில் நரிக்குறவர்
சிவகங்கை: தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டாலும், அந்த பட்டாவிற்குரிய நிலம் கையில் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் அவல நிலை குறித்து புகார்கள் எழுந்துள்ளன.. அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் இருந்தும் சில புகார்கள் முளைத்துள்ளன.. என்ன நடக்கிறது? அம்மக்கள் விடுக்கும் கோரிக்கை என்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்..
பொதுவாக வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு கிராமப்புறங்களில் 3 சென்ட், நகராட்சிகளில் ஒன்றரை சென்ட், மாநகராட்சிகளில் ஒரு சென்ட் என நிலம் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.

இந்த பகுதிகளில் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு ஆண்டுதோறும் சுமார் 200 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்குகிறது... ஆனால், கள நிலவரமோ வேறாக இருக்கிறது.
அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா
அரசு விழாக்களில் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் மேடையில் வைத்து பட்டாக்களை கொடுத்து விடுகிறார்கள்.. ஆனால், அந்த பட்டாவில் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு மக்கள் குடியேற செல்லும்போது, அங்குள்ள உள்ளூர் நபர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், அதனால் நிலத்தை ஒப்படைக்க முடியாமல் அதிகாரிகள் பின்வாங்குவதும் தொடர்கதையாகி வருகிறது..
உதாரணமாக, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி பகுதியை சேர்ந்த 73 நரிக்குறவர் இன மக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன..
முதலில் 2023 ஆம் ஆண்டு அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் இவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.. ஆனால், அந்த நிலத்தில் குடியேற எதிர்ப்பு கிளம்பியதால், மாற்று இடம் தருவதாக அதிகாரிகள் சொன்னார்கள்..
நரிக்குறவர் மக்கள்
அதன்பிறகு 2025 செப்டம்பர் மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மூலமாக மீண்டும் அதே குடும்பங்களுக்கு புதிய இடத்திற்கான பட்டாக்கள் வழங்கப்பட்டன.. ஆனால், அந்த இடத்திலும் மக்கள் குடியேற சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்களாம.. இப்படி சில அதிகாரிகள் மாற்றி மாற்றி பட்டாக்களை மட்டுமே காகிதமாக கொடுத்து கொண்டிருக்கிறார்களே தவிர, ஏழைகள் தலைசாய்க்க ஒரு துண்டு நிலத்தை கூட உறுதி செய்யவில்லை என்பது வேதனையான விஷயமாகும்..
இதே நிலைதான் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியிலும் நீடிக்கிறது.. தமிழகம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கையில் பட்டாவை வைத்து கொண்டு, சொந்த நிலம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்..
பட்டா எங்கே
சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்டோர் இதே நிலையை சந்திப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குமுறி வருகிறார்கள்.. கடந்த வாரம் கூட நரிக்குறவ இன மக்கள் கழுத்தில் கோரிக்கை அட்டைகளை மாட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்..
அரசு வழங்கும் பட்டா என்பது வெறும் காகிதமாக மட்டும் இருக்க கூடாது.. மக்கள் அந்த நிலத்தில் அச்சமின்றி குடியேறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.. நிலத்தை வழங்காமல் வெறும் பட்டாவை மட்டும் கொடுத்து காலத்தை இழுத்தடிப்பது ஏழை மக்களை வஞ்சிக்கும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்..
அரசு இயந்திரம் உரிய நடவடிக்கை எடுத்து, பட்டா பெற்ற அனைத்து மக்களுக்கும் அந்தந்த நிலத்தை முறையாக ஒப்படைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...!












Click it and Unblock the Notifications