சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் தீ விபத்து.. பட்டாசு விட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை
சிவகாசி: பத்ரகாளியம்மன் கோவில் ராஜ கோபுரம் தீ விபத்து குறித்து விசாரணை நடத்திய சிவகாசி காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். திருமண விழாவிற்கு பட்டாசு வெடித்த போது அந்த தீப்பொறி பட்டு கோவில் கோபுரத்தின் மீது கட்டப்பட்டிருந்த சாரம் பற்றி எரிந்துள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவிலின் ராஜ கோபுரத்திற்கு வண்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டதுடன், வண்ண வேலைபாடுகளை பார்க்க முடியாதபடி கோபுரத்தின் உச்சிப்பகுதியை பச்சை நிற துணிகளை வைத்து மறைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று கோவில் வழியாக திருமண நிகழ்ச்சிக்காக சீர் வரிசைகள் கொண்டு செல்லும் பொழுது பட்டாசு வெடித்துள்ளனர்.

ராஜகோபுரத்தில் தீ விபத்து
வான வேடிக்கை நடந்த போது அதில் மேலே சென்று வெடித்த பட்டாசு ஒன்று ராஜகோபுர சாரத்தின் மேல் விழுந்ததில் தீ பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் சாரம் முழுவதும் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களுடன் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வழக்குப்பதிவு
இந்த தீ விபத்து தொடர்பாக சிவகாசி நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிவகாசியில் பிரசித்திப் பெற்ற கோயிலின் ராஜகோபுரத்தின் மீது தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பக்தர்கள் அச்சம்
பத்ரகாளியம்மன் கோவில் ராஜ கோபுரம் பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி பக்தர்கள், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் அபசகுனமாக இருக்கலாமோ என்றும் பரபரப்பாக பேசிக்கொண்டனர். பட்டாசு தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்றும் சாமியை வேண்டிக்கொண்டனர்.

2 பேர் கைது
இதனிடையே ராஜகோபுர தீ விபத்து காரணமாக சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications