பாக். பங்கேற்கும் ஆசிய கோப்பை.. இந்தியா விலகுகிறதா? பிசிசிஐ மறுப்பு
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதனை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா மறுத்துள்ளார்.
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்காது என்கிற தகவல்களில் உண்மை இல்லை. ஐபிஎல் மீதும் அடுத்து வரும் இங்கிலாந்து தொடர் மீதும் நாங்கள் கவனம் வைத்திருக்கிறோம். ஆசிய கோப்பை போட்டியிலிருந்து விலகுவது தொடர்பாக நாங்கள் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஆடவருக்கு தனியாகவும், மகளிருக்கு தனியாகவும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்தியாவில் ஆடவர் போட்டியும், இலங்கையில் மகளிருக்கான போட்டியும் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் மோதல் வெடித்தது.
இப்போது இந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தாலும் கூட, பாகிஸ்தானுடன் இந்தியா எப்படி விளையாடும்? இந்தியா பெருந்தன்மையாக ஓகே சொன்னாலும் பாகிஸ்தான் இறங்கி வருமா? போட்டி மீண்டும் இரு நாடுகளுக்கு இடையேயான சண்டையாக வெடிக்குமா? என்கிற கேள்வி எழுந்தது. இதற்கிடையில்தான் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்காது என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications