பெரிய மிஸ்டேக்.. பாகிஸ்தான் அணி சறுக்கியது இங்குதான்! அஸ்வின் கொடுத்த விளக்கம்!
சென்னை: நடப்பு டி20 உலக கோப்பை போட்டியில், நேற்று கொழும்பு மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிக மோசமாக தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் சறுக்கியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு முதலில் பேட்டிங்கை கொடுத்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது. 176 எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே சொதப்பியது. இறுதியில் தோல்வியடைந்தது. இது மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.

இந்த தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஸ்வின் விளக்கமளித்துள்ளார். அதாவது டாஸ் போடும்போது வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும் என்று அஸ்வின் கூறியுள்ளார். ஏனெனில் கொழும்பு மைதானத்தை பொறுத்தவரை, சேஸிங் செய்வது கஷ்டம் என்பதை ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே அணி போட்டியை வைத்தே தெரிந்துக்கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
"டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தபோதே, பாகிஸ்தான் அணி பாதி தோற்றுவிட்டது. இந்த பிட்சில் கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களை சேஸ் செய்வது எல்லாம் சாத்தியமே இல்லை. அது வேலைக்கு ஆகாத விஷயம்" என கூறியுள்ளார்.
இது ஒரு காரணம் எனில், மற்றொரு காரணம் இந்திய அணி நெருக்கடியான நேரத்தில் பாகிஸ்தான் அணியை விட சிறப்பாக செயல்படும் என்பதுதான் என அஸ்வின் விளக்கியுள்ளார். பாகிஸ்தான் வீரர்களால், இந்திய அணியை போல நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, தனது பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திய விதம் குறித்தும் அஷ்வின் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, மாற்று ஜோடிகளை ஆராயாமல் ஷாஹீன் அப்ரிடியின் தொடக்க அறிமுகம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், "அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை எடுத்தீர்கள். ஆனால், அவர் எல்லாப் பக்கமும் ரன்களை வாரி வழங்கினார். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை இஷான் கிஷன் அசால்ட்டாக டீல் செய்வார் என்பதை நாங்கள் முந்தைய மேட்சிலேயே தெளிப்படுத்தியுள்ளோம். இதற்கு போதுமான டேட்டாக்கள் ஆதாரங்களாக இருக்கின்றன. எனவே வீரர்களுக்கு 'இதுதான் உங்கள் மேட்ச்-அப்' என்று விளக்கப்பட வேண்டும்.
இஷான் இடது கை வேகப்பந்து வீச்சை எதிர்கொள்கிறார் என்றால், அவர்கள் வேறுவிதமாகச் செயல்பட வேண்டும். இடது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக ரவுண்ட் தி விக்கெட் வீசியிருக்க வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை, இரண்டாவது ஓவர் சாய்ம் அயூப் வீசியிருக்க வேண்டும்" என்றும் விளக்கமளித்துள்ளார்.
இறுதி ஓவர்களில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டை இழந்தது குறித்தும் அஷ்வின் விமர்சித்தார். அப்ரிடி மீண்டும் பந்துவீச வந்தபோது இந்தியா முன்னிலை பெற அது உதவியது. "வேகப்பந்து வீச்சாளர் அழுத்தத்தைக் குறைத்துவிட்டார். 19 ஓவர்களுக்குப் பிறகு இந்தியா 159 ரன்கள் எடுத்திருந்தது, அப்ரிடி மீண்டும் வந்தார்; மேலும் ரன்களை அள்ளி கொடுத்தார். இறுதி ஓவரில் அப்ரிடி 16 ரன்கள் கொடுத்தார்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications