நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய அணி.. ஜனாதிபதி, மோடி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து
துபாய்: இன்று துபாயில் நடந்த் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிப் போட்டியில் இன்று இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி பெற்று கோப்பையை பெற்றது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கியது. இந்த முறை தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றி பெற்று வந்தது. பாகிஸ்தானுடனான போட்டியிலும் எளிதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று துபாயில் இறுதிப் போட்டி நடந்தது.

இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாசில் இந்தியா தோற்றாலும் போட்டியில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக 76 ரன்கள் எடுத்த கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்ட்டார்.
12 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இதனால் நாடு முழுக்க ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பிரதமர் மோடியும் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், இந்திய வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சரவெடி போல் வீரர்கள் செயல்பட்டதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும், இந்திய அணி மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications