சென்னையை சூழும் மழை மேகங்கள்.. இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி.. மழையால் பாதிக்குமா? வெதர்மேன் நறுக்
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், போட்டி நடைபெறும் நாளில் மழை பெய்யுமா என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த முறை இந்தியா நடத்துகிறது. கடந்த 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால் இதற்கு பொதும்ககளிைடயே எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

இதில் முதல் போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்த்துக் கொண்டது.
இந்தியா ஆஸ்திரேலியா போட்டி: உலகக் கோப்பையில் ஐந்தாவது ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு பவர்புல் அணிகள் மோதும் இந்தப் போட்டியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. அதேநேரம் நாளைய தினம் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்பதில் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதற்கிடையே இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் முக்கிய விளக்கம் கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்ரில், "தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் காலத்தில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டி நடைபெறுகிறது. சென்னையில் 8ஆம் தேதி மாலை / இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் மழை மேகங்கள் சேப்பாக்கம் அருகே கரையை அடையுமா என்பதே கேள்வியாக இருக்கிறது.
கஷ்டம்: மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவிப்பு ஏற்கனவே இருக்கிறது. ஆனால், சேப்பாக்கம் மைதானம் அமைந்துள்ள இடம் முக்கியமானது.. ஏனென்றால் மழை மேகங்கள் சேப்பாக்கத்தை நோக்கி நகரச் சிரமப்படும்.
ஒட்டுமொத்தமாகப் போட்டி நடைபெறும் அக்டோபர் 8 ஆம் தேதியைப் பொறுத்தவரைச் சென்னை நகரில் மழை வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மழை பெய்தாலும் அது போட்டியைப் பாதிக்காது.. இதனால் ஓவர்களும் குறைக்கப்படாது. முழு போட்டி நடைபெறவும்.. போட்டியின் முடிவுகள் கிடைக்கவும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
நிம்மதி: உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இதற்கான டிக்கெட்கள் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்துவிட்டது. இந்தச் சூழலில் சென்னையில் மழை பெய்யலாம் என் தகவல் பலரையும் கவலையிலேயே ஆழ்த்தியது. ஆனால், இப்போது வெதர்மேன் சென்னையில் மழை பெய்தாலும் அது சேப்பாக்கத்தை நோக்கி வரும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு எனக் கூறியுள்ளார். இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications