கோலி, ராகுல் மனைவி பற்றி சர்ச்சை கருத்து! ஹர்பஜன் சிங்கிற்கு கிளம்பிய எதிர்ப்பு! இப்படி சொல்லலாமா?
சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலககோப்பை போட்டியின்போது விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, கேஎல் ராகுலின் மனைவி அதியா ஷெட்டி ஆகியோர் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஹர்பஜன் சிங்கை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் பைனல் நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி உலககோப்பையையும் வென்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் போட்டியின் ரிசல்ட் வேறு விதமாக மாறிப்போனதால் ரசிகர்கள் சோகமாகினர். அதோடு இந்திய வீரர்களும் கண் கலங்கியபடி மைதானத்தில் இருந்து சென்றனர். இதற்கிடையே தான் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா மற்றும் கேஎல் ராகுலின் மனைவியும், நடிகையுமான அதியா ஷெட்டி ஆகியோர் குறித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறிய கருத்து என்பது சர்ச்சையாகி உள்ளது.
அதாவது இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் இந்திய வீரர்களின் மனைவிகள், குடும்பத்தினர் மைதானத்துக்கு வந்து ஆட்டத்தை ரசித்து கொண்டிருந்தனர். இந்தியா பேட்டிங் செய்தபோது விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் களத்தில் நின்றனர். அப்போது விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் மனைவி அதியா ஷெட்டி ஆகியோரை நோக்கி கேமரா திரும்பியது. இதையடுத்து இருவரும் மைதான திரை மற்றும் டிவியில் தெரிந்தனர். அப்போது அனுஷ்கா ஷர்மா மற்றும் ஷெட்டி ஆகியோர் பேசி கொண்டிருந்தனர்.
இந்த வேளையில் இந்தியில் வர்ணணையாளராக இருந்த ஹர்பஜன் சிங், ‛‛அனுஷ்கா சர்மாவுக்கும், அதியா ஷெட்டிக்கும் இடையே நடக்கும் உரையாடல் என்பது கிரிக்கெட் குறித்ததா? இல்லை திரைப்படங்கள் குறித்ததா என நான் யோசிக்கிறேன். ஏனென்றால், அவர்களுக்கு கிரிக்கெட்டைப் பற்றி எந்த அளவுக்குப் புரிதல் இருக்கிறது என எனக்கு தெரியவில்ல'' என்றார். ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்து தான் சர்ச்சையாகி உள்ளது.
அதாவது அனுஷ்கா சர்மா அதியா ஷெட்டி ஆகியோருக்கு கிரிக்கெட் பற்றிய புரிதல் இருக்காது என்பதை அவர் மறைமுகமாக கூறியதாக நெட்டிசன்கள் நினைக்கின்றனர். இதனால் ஹர்பஜன் சிங்கை நெட்டிசன்கள் எக்ஸ் உள்பட பல இணையதளங்களில் திட்டி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹர்பஜன் சிங் தனது கருத்துக்கு அனுஷ்கா சர்மா மற்றும் அதியா ஷெட்டி ஆகியோரிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், ஹர்பஜன் சிங் தனது ஆணாதிக்க மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications