IND vs BAN: டாஸிலேயே கண்டம்.. இந்தியாவுடன் விளையாடும் விதி.. வெற்றிக்கு வழிவிடுமா துபாய் மைதானம்?
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று தெரிய வந்துள்ளது. 2021 டி20 உலகக்கோப்பை, அண்மையில் முடிவடைந்த ஐஎல்டி20 உள்ளிட்ட தொடர்களில் சேஸிங் செய்த அணிகளே அதிக வெற்றியை பெற்றிருப்பதால், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முன்பாக இருக்கும் முக்கியமான சவாலே டாஸில் வெல்வதுதான் என்று மாறியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடும் இந்த ஆட்டம் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதுவரை நடந்துள்ள ஐசிசி தொடர்களில் வங்கதேசம் அணி ஒரேயொரு முறை இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் அணியிடம் தோல்வியடைந்ததன் காரணமாக இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இதன்பின் 2016 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்த வங்கதேச அணிக்கு வாய்ப்பு கிடைத்த போதும், தேவையில்லாத ஷாட்களை விளையாடி தோனியின் புத்திசாலிதனத்தால் வீழ்த்தப்பட்டது.
அதேபோல் 2022 டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியை மழை வந்து காப்பாற்றியது என்றே சொல்ல வேண்டும். இதனால் கடந்த சில ஆண்டுகளில் வங்கதேசம் அணி கிரிக்கெட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் அளிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுக்கவே ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் சென்று இந்திய அணி விளையாடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்காத சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி துபாய் மைதானத்தில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
துபாய் மைதானத்தை பொறுத்தவரை மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் டாஸ் வெல்லும் அணிகள் பெரும்பாலும் 2வது பேட்டிங்கையே தேர்வு செய்யும். இந்த பிட்சில் சேஸிங் செய்யும் அணிகளுக்கு மிகப்பெரிய சாதகம் ஏற்படும். 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் துபாய் மைதானத்தில் நடைபெற்ற 13 போட்டிகளில் 12 போட்டிகளில் 2வது பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளது.
அதேபோல் சில வாரங்களுக்கு முன்பாக ஐஎல்டி20 லீக் தொடரில் துபாய் மைதானத்தில் நடைபெற்ற 15 போட்டிகளில் 11ல் சேஸிங் செய்த அணிகளே வென்றிருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், கடைசியாக நடைபெற்ற 13 போட்டிகளில் 9ல் சேஸிங் செய்த அணிகளே வென்றுள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணிக்கே கூடுதல் சாதகம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
வங்கதேச போட்டிக்கு மட்டுமல்லாமல் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ள அத்தனை போட்டிகளிலும் இந்த சிக்கல் உள்ளது. ஒவ்வொரு முறையும் டாஸ் மட்டுமே வெற்றி தோல்வியை முடிவு செய்தால், இந்திய அணிக்கு சிக்கல் நிச்சயம். ஏனென்றால் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் தோற்றாலே அழுத்தத்தில் தோற்க வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications