இந்திய அணி தோற்கணும்.. பாகிஸ்தான் வென்றால் நடக்கும் நன்மை.. முன்னாள் வீரரின் பேச்சால் எழுந்த சர்ச்சை
மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் அதுல் வசம் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி வென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரே சுவாரஸ்யமாகிவிடும் என்று கூறிய அவர், இந்தியாவின் தொடர் வெற்றி அமிதாப் பச்சனின் சண்டை காட்சியை போல் போர் அடிப்பதாக தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் வங்கதேச அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தினால், இந்திய அணியால் எளிதாக அரையிறுதி சுற்றில் கால் வைக்க முடியும்.

அதேபோல் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணியை அதிகளவில் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது. இருந்தாலும் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வி ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் யார் வெல்வார்கள் என்ற கணிப்பை பல்வேறு தரப்பினரும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைய விரும்புவதாக இந்திய முன்னாள் வீரர் அதுல் வசன் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதுல் வசன் பேசுகையில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தால், சாம்பியன்ஸ் டிராபி தொடரே சுவாரஸ்யமாகிவிடும்.
இந்த ஆட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வென்றுவிட்டால், உண்மையாக போட்டி அதன்பின்பே தொடங்கும். இந்திய அணி தொடர்ந்து வெல்வது அமிதாப் பச்சன் சண்டையில் தொடர்ந்து அடிப்பதை போல் சுவாரஸ்யமில்லாமல் இருக்கிறது. அதில் எந்த உற்சாகமும் இல்லை. பாகிஸ்தான் அணி மட்டும் கம்பேக் கொடுத்தால், நிச்சயம் தொடருக்கு சிறந்த ஒன்றாக மாறிவிடும்.
பாகிஸ்தான் அணி தங்களின் திறமையை வளர்க்கும் வரையில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்காது. 90களில் விளையாடிய போது பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம், வாக்கர் யூனுஸ், சயீத் அன்வர் என்று சிறந்த வீரர்கள் இருந்தார்கள். அப்போது பாகிஸ்தான் அணியே அதிக போட்டிகளில் வெற்றிபெறும். ஆனால் பாகிஸ்தானில் நடந்த சில சம்பவங்கள் அந்நாட்டின் கிரிக்கெட்டையும் பாதித்தது.
90களில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி, கொஞ்சம் கொஞ்சமாக வீரர்கள் கிடைக்காமல் சொதப்ப தொடங்கியது. ஆனால் இந்திய அணி 2000க்கு பின் சிறந்த வீரர்களை உருவாக்கி தொடர்ச்சியாக வெற்றியை பெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வென்றால், ஒட்டுமொத்த நாடும் சாம்பியன்ஸ் டிராபியை பார்க்க தொடங்கிவிடும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications