17 இன்னிங்ஸ்.. ஒரு அரைசதம் கூட இல்லை.. சுப்மன் கில்லுக்கு எதற்கு இத்தனை வாய்ப்பு? பிசிசிஐ அரசியல்!
மும்பை: இந்திய டி20 அணிக்காக ஆடிய கடைசி 17 இன்னிங்ஸில் துணைக் கேப்டன் சுப்மன் கில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டர் பாய், கேப்டன் மெட்டீரியல் என்பதற்காக சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்றும் விளாச தொடங்கியுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு சுப்மன் கில்லின் மோசமான ஆட்டமே காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார்.

சுப்மன் கில் இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்த பின் தொடர்ந்து 17 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடந்த 14 இன்னிங்ஸில் இவரின் பேட்டிங் சராவரி வெறும் 14ஆக மட்டுமே இருக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கிவிட்ட சூழலில், சுப்மன் கில்லுக்கு தொடர் வாய்ப்புகள் கொடுத்தும், அவர் சோபிக்காதது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் பெஞ்சில் சஞ்சு சாம்சன் அமர்ந்திருக்கிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனின் இடத்தில் சுப்மன் கில் ஆடிக் கொண்டிருக்கிறார். அதேபோல் சுப்மன் கில் இந்திய டி20 அணிக்குள் கொண்டு வரப்பட்ட விதமும் மீண்டும் விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது சுப்மன் கில் இந்திய அணியிலேயே இடம்பெறவில்லை.
பேக் அப் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதேபோல் பேக் அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார். ஆனால் திடீரென இலங்கை டி20 தொடருக்கான அணியில் சுப்மன் கில் கொண்டு வரப்பட்டதோடு, துணைக் கேப்டன் பதவியையும் பிசிசிஐ தாரை வார்த்தது. அதன்பின் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கி 7 இன்னிங்ஸில் 3 சதங்களை விளாசி தள்ளினார்.
ஆனாலும் ஆசியக் கோப்பைத் தொடரில் சுப்மன் கில் காயம் காரணமாக வெளியேறியதாலேயே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சுப்மன் கில் தான் முதன்மை தொடக்க வீரர் என்று பிசிசிஐ காரணங்களை அடுக்கியது. ஆனால் ஆசியக் கோப்பையில் இருந்து தொடர்ச்சியாக 14 இன்னிங்ஸில் சுப்மன் கில் சொதப்பி இருக்கிறார்.
இவ்வளவு அதிக வாய்ப்புகள் சஞ்சு சாம்சனுக்கோ, ஜெய்ஸ்வாலுக்கோ அல்லது ருதுராஜுக்கோ பிசிசிஐ வழங்கியதே இல்லை. இதனால் சுப்மன் கில்லை இந்திய டி20 அணியில் இருந்து நீக்கிவிட்டு உடனடியாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் விளையாடினால், ரிங்கு சிங்கும் இந்திய அணியில் இடம்பெறலாம்.
ஆனால் இந்திய டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷரான ரிங்கு சிங் இப்போது இந்திய அணியில் கூட இடம்பெறவில்லை. அவர் எதற்காக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது கம்பீர் மற்றும் அகர்கர் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். போஸ்டர் பாய் என்பதற்காக சுப்மன் கில்லை நம்பி இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் களமிறங்கினால், சொந்த மண்ணிலேயே மீண்டும் ஒரு அவமானத்தை சந்திக்க நேரிடலாம்.












Click it and Unblock the Notifications