ஸ்கெட்ச் மும்பைக்கு இல்ல.. விராட் கோலிக்கு.. ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3ல் வரக் காரணம் இதுதான்!
சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மும்பை அணி நிர்ணயித்த 156 ரன்கள் என்ற இலக்கை 19.1 ஓவர்களில் சேஸிங் செய்து சிஎஸ்கே அணி வென்றிருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா - ராகுல் திரிப்பாட்டி கூட்டணி களமிறங்கியது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பக் காலம் முதலே தொடக்க வீரராகவே விளையாடியவர். மிடில் ஆர்டர் வீரராக இருந்தாலும், சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக பல வெற்றியை கண்டார்.

இந்த போட்டியில் ராகுல் திரிப்பாட்டி 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பின், நம்பர் 3 பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார். போல்ட், தீபக் சஹர், ஸ்பின்னர்களான சான்ட்னர், வில் ஜாக்ஸ் என்று அனைவரையும் பொளந்து கட்டினார். ஆக்ரோஷம் காட்டாமல் ரொம்ப சாதாரணமாக பவுண்டரியை விளாசியது ஆச்சரியத்தை கொடுத்தது.
விக்னேஷ் புத்தூர் பவுலிங்கிலும் சிக்ஸ் அடிக்க முயற்சித்துதான் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக ஆடிய அவர் 26 பந்துகளில் 56 ரன்களை விளாசி தள்ளினார். சரியாக பார்த்தோம் என்றால், ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம்தான் மும்பை அணியிடம் இருந்து ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பியது. இதனை மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒப்புக் கொண்டார்.
இருந்தாலும் ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3ல் வந்தது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே விவாதமாகி வருகிறது. ராகுல் திரிப்பாட்டி பவர் பிளே ஓவர்களில் ரன்களை விளாசி தள்ளக் கூடியவர். புனே அணியில் இருந்த போது, அந்த பணியை சிறப்பாக செய்ததால், நம்பர் 3ல் களமிறங்க ருதுராஜ் கெய்க்வாட் முன் வந்துள்ளார்.
அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3ல் களமிறங்க இன்னொரு மறைமுக காரணமும் உள்ளது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா கிட்டத்தட்ட ஓய்வு பெறும் நிலையில் இருக்கிறார். ஒருவேளை சுப்மன் கில் மீண்டும் தொடக்க வீரராக கொண்டு செல்லப்பட்டால், அந்த இடத்தில் விளையாட தயாராக இருக்கிறேன் என்பதை ருதுராஜ் கெய்க்வாட் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
ஏற்கனவே இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சதம் விளாசி இருக்கிறார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டு கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகினார். இதனால் இந்த ஐபிஎல் 500 ரன்களுக்கு மேல் நம்பர் 3ல் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கி விளாசினால், அவரால் இந்திய அணிக்குள் இடம்பிடிக்க முடியும்.
அதேபோல் அடுத்த சில ஆண்டுகள் இந்திய ஒருநாள் அணியில் விராட் கோலியின் நம்பர் 3 இடம் காலியாகவே இருக்கும். விராட் கோலியின் இடத்தை குறி வைத்து ருதுராஜ் கெய்க்வாட் காய்களை நகர்த்தி வருவதாகவும் பார்க்கப்படுகிறது. இருந்தாலும் சிஎஸ்கே அணிக்கு எந்த சிக்கலும் ஏற்படாமல் வென்றாலே போதும் என்பதே ரசிகர்களின் மனநிலையாக உள்ளது.












Click it and Unblock the Notifications