PAK vs NZ: இதுதான் உங்க கெத்தா.. காலியாக உள்ள இருக்கைகள்.. காத்து வாங்கிய கராச்சி ஸ்டேடியம்!
கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. கராச்சி மைதானத்தில் நடந்து வரும் இந்த ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தானை இந்திய அணி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியை காண்பதற்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் அந்த மைதானத்தில் மொத்தமாக 1.30 லட்சம் இருக்கைகள் உள்ளன.

இதனால் நரேந்திர மோடி மைதானத்தில் உலகக்கோப்பை முதல் போட்டியை காண்பதற்கே ரசிகர்கள் வரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ஆகிய நாடுகளின் ரசிகர்கள் மோசமாக கிண்டல் செய்தனர். அதன்பின் நடந்த ஒவ்வொரு போட்டியிலும் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் குவிந்தனர்.
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனும், தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் வில் யங் 113 பந்துகளில் ஒரு சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 107 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இதனிடையே இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே கராச்சி தேசிய மைதானம் காலியாக உள்ளது.
வெயில் காரணமாக ரசிகர்கள் தாமதமாக வருவார்கள் என்று பார்க்கப்பட்ட போது, மாலை நேரமாகிய போதும் ரசிகர்கள் வரவில்லை. கிட்டத்தட்ட மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் இருக்கைகள் காலியாகவே உள்ளது. சுமார் 30 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கராச்சி மைதானம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியை பார்க்க கூட பாகிஸ்தான் ரசிகர்கள் நேரில் வரவில்லை. கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு பின் முதல் ஐசிசி தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடக்கிறது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்களின் ஆதரவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொந்த அணி விளையாடும் போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் வரவில்லை.
இதனால் இந்திய அணி ரசிகர்கள் பாகிஸ்தானை கிண்டல் செய்து வருகின்றனர். ரசிகர்கள் நேரில் வந்து பார்க்காததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் மார்க்கெட்டிங் பணிகள் போதிய அளவில் இல்லாததே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாததும் அந்நாட்டு ரசிகர்களின் ஆர்வமின்மைக்கு மறைமுக காரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications