"அந்த சம்பவம்" 29 வருடமாக பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடக்காதது ஏன்? சாம்பியன்ஸ் டிராபி பின்னுள்ள கதை!
கராச்சி: பாகிஸ்தான் மண்ணில் 29 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக ஐசிசி தொடர் தொடங்கி இருக்கிறது. கடைசியாக 1996ஆம் ஆண்டில் உலகக்கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த ஐசிசி தொடரில் இந்திய அணியை தவிர்த்து மற்ற 7 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பாகிஸ்தானில் விளையாடுகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக பிஎஸ்எல் தொடரில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் விளையாடி வந்தாலும், இதுவரை ஐசிசி தொடர் நடத்துவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதற்கு 2009ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் முக்கியக் காரணமாகும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் இலங்கை அணி புறப்பட்டது. சரியாக கடாஃபி மைதானம் வாசலில் 12 தீவிரவாதிகள் இலங்கை அணியின் பேருந்து நோக்கி சுடத் தொடங்கினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மற்றும் 2 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சங்கக்காரா, தில்ஷன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதன்பின் உடனடியாக லாகூர் மைதானத்தில் இருந்து இலங்கை அணி வீரர்கள் விமானப்படை விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் கிரிக்கெட் உலகையே அதிர செய்தது. அதுமட்டுமல்லாமல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பும் பாகிஸ்தானிடம் இருந்து பறிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாட தயாராக இல்லை. வேறு வழியின்றி பாகிஸ்தான் வீரர்கள் ஆடிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. அந்த வெற்றிதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
எந்த அணியும் பாகிஸ்தான் வந்து விளையாட தயாராக இல்லாத போது, ஜிம்பாப்வே வீரர்களை அழைத்து வெற்றிகரமாக கிரிக்கெட் தொடரை நடத்தி காட்டியது. பின்னர் 2019ஆம் ஆண்டு இலங்கை அணி சென்று விளையாட, தொடர்ந்து ஒவ்வொரு அணியாக சென்று டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடினர். இதன்பின்னரே ஐசிசி நிர்வாகம் பாகிஸ்தான் மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த ஒப்புதல் அளித்தது.
தற்போதும் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இருந்தாலும் பாகிஸ்தான் அணி மாற்று ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணிகளுக்கு அதிகளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதோடு, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் மட்டும் சுமார் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பயணத்திற்காக மட்டும் 9 சார்ட்டர் பிளைட்-கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு கட்ட பாதுகாப்புகளை கடந்த பின்னரே ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாகிஸ்தானில் ஒரு வழியாக கிரிக்கெட் திரும்பிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications