“எப்பவும் உங்களுடன் இருப்போம்”.. உலகக் கோப்பையை பறிகொடுத்த இந்திய அணிக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!
அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு ஆறுதல் கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று நிறைவடைந்தது. உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண பல முன்னணி வீரர்கள் மற்றும் பிரபலங்கள் மைதானத்திற்கு வந்தனர். இந்த தொடரில் தொடர்ந்து 10 வெற்றிகளுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கியது இந்தியா. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தலா 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். விராட் கோலி 54 ரன்னும், கே.எல்.ராகுல் 66 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 50 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் 240 ரன்கள் எடுத்தது. 241 ரன் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடியது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை நொறுக்கினார் அவர் 137 ரன்னும், லபுஷேன் 58 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் அந்த அணி 43 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இந்தியாவின் உலகக் கோப்பை கனவு பறிபோனது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தப் போட்டியை பார்ப்பதற்கு அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்தார். அவர் மட்டுமின்றி ஆஸ்திரேலியா துணை பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்டு மார்லஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோரும் இந்தப் போட்டியைக் காண நேரில் வருகை தந்தனர். லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களுடன், பிரதமர் மோடி இந்தப் போட்டியைப் பார்த்தார்.
இந்நிலையில், இந்திய அணி உலகக் கோப்பையை தவற விட்டுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையைப் பறிகொடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டியர் டீம் இந்தியா, இந்த உலகக் கோப்பை தொடரில் உங்களின் திறமை மற்றும் உறுதிப்பாடு குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்கு மகத்தான பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்! இந்த தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டம், இன்றைய மகத்தான வெற்றியில் உச்சக்கட்டத்தை எட்டியது. இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு பாராட்டுக்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications