ஜெய்ஷாவுடன் கிரிக்கெட்டை ரசித்த ரஜினிகாந்த்! அமித்ஷா மகன் அருகே அமர்ந்ததன் பின்னணியில் அரசியலா? விபரம்
மும்பை: இந்தியா-நியூசிலாந்து இடையேயானா உலககோப்பை அரையிறுதி போட்டியை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் மும்பை வான்கடே மைதானத்தில் நேரில் கண்டு ரசித்து வருகிறார். இந்த வேளையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷாவுடன், ரஜினிகாந்த் சேர்ந்து அமர்ந்து கிரிக்கெட் பார்த்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
50 ஓவர் உலககோப்பை போட்டியை இந்தியா நடத்தி வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்தது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. இன்று அரையிறுதி போட்டிகள் துவங்கின.

முதல் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ரோகித் ஷர்மா வழக்கம்போல் அதிரடியாக ஆடி 47 ரன்களில் அவுட் ஆனார். சுப்மன் கில் 79 ரன்களில் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். விராட் கோலி தனது 50வது ஒருநாள் போட்டி சதத்ததை அடித்தார். அவர் 117 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஸ்ரேயஸ் அய்யரும் தனது பங்கிற்கு சதமடித்து 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 397 ரன்கள் குவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி இமாலய இலக்கை நோக்கி ஆடி வருகிறது.
இந்த போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நேரில் கண்டு ரசித்தார். இந்த வேளையில் நடிகர் ரஜினிகாந்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐயின் செயலாளருமான ஜெய் ஷாவும் ஒன்றாக அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்த்தனர். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அரசியலுடன் சிலர் ஒப்பிட தொடங்கி உள்ளனர்.
அதாவது ரஜினிகாந்த் தனிக்கட்சி அமைக்க முயன்றார். அதன்பிறகு அதனை அவர் கைவிட்டார். அதன்பிறகு அவர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகி வருகிறார். சமீபத்தில் கூட ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க யோகி ஆதித்யநாத்துக்கு அழைப்பு விடுத்தார். மேலும் அவர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இத்தகயை சூழலில் தான் நடிகர் ரஜினிகாந்த் ஜெய்ஷாவுடன் சேர்ந்து இந்தியா-நியூசிலாந்து இடையேயான உலககோப்பை அரையிறுதி போட்டியை கண்டு ரசித்துள்ளதற்கும் சிலர் அரசியல் சாயம் பூச தொடங்கி உள்ளனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் இது எதார்த்தமாக நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது இந்தியாவில் பிசிசிஐ சார்பில் உலககோப்பை போட்டி நடந்து வரும் நிலையில் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகர்கள் உள்பட பல துறைகளில் முன்னணியில் உள்ள பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட் கொடுத்து போட்டியை காண ஜெய்ஷா அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் சென்ற நிலையில் அவரும் ஜெய்ஷாவும் அருகே அமர்ந்து போட்டியை ரசித்துள்ளனர்.

இதுதவிர இன்றைய போட்டியில் நடிகர் ரஜினிகாந்த் சிறிது நேரம் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவரான சந்திரசேகரனுடன் அமர்ந்து கண்டுகளித்தார். இதனால் ரஜினிகாந்த்-ஜெய்ஷா அருகருகே அமர்ந்து போட்டியை ரசித்ததன் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை. இது இயல்பாக நடந்தது தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
மேலும் இன்றைய போட்டியை நடிகர் ரஜினிகாந்த் தவிர பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ரன்பீர் கபூர், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த போட்டியை நேரில் ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications