இப்படியொரு பேட்டிங் பிட்சிலும்.. கொடூரமாக சொதப்பிய சஞ்சு சாம்சன்.. இனி நிரந்தர பெஞ்ச் தான்!
திருவனந்தபுரம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும், இனி நிரந்தரமாக பெஞ்சில் தான் அமர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்களை குவித்துள்ளது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய 169 ரன்களை விளாசி இருக்கிறது. இந்திய அணி மொத்தமாக 23 சிக்ஸ், 17 பவுண்டரிகளை விளாசி தள்ளியுள்ளனர்.

சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 43 பந்துகளில் 10 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 103 ரன்களையும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 6 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 63 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 42 ரன்களையும், அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 30 ரன்களையும் சேர்த்துள்ளனர். வழக்கம் போல் சஞ்சு சாம்சன் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சொந்த மண்ணில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய சஞ்சு சாம்சன் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய அணியையும் ஏமாற்றியது என்று சொல்லலாம். ஏனென்றால் தொடர்ச்சியாக 5 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் சொதப்பி இருக்கிறார். 5 போட்டிகளில் விளையாடி 46 ரன்களை மட்டுமே சஞ்சு சாம்சன் சேர்த்திருக்கிறார்.
மிகச்சிறந்த பேட்டிங் பிட்ச் அமைந்த போதும், அதனை பயன்படுத்தி சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு வரவில்லை. டி20 உலகக்கோப்பை நெருங்கிவிட்ட சூழலில், தொடக்க வீரர் ஃபார்மில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும். அதேபோல் இஷான் கிஷனோ 4 போட்டிகளில் விளையாடி 215 ரன்களை குவித்திருக்கிறார். இவரும் சஞ்சு சாம்சனின் இடத்திற்கான போட்டியில் தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
திலக் வர்மா காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், இஷான் கிஷனுக்கு இது வாய்ப்பாக அமைந்தது. அதனை நன்றாகவே பயன்படுத்தி கொண்டுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். ரசிகர்கள் இப்போதே இனி சஞ்சு சாம்சனுக்கு நிரந்தர பெஞ்ச் என்று விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications