குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்!
அகமதாபாத்: ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் 3வது முறையாக ஹேசல்வுட் பவுலிங்கில் ஆட்டமிழந்து ஏமாற்றி இருக்கிறார். இதனால் குஜராத் அணி ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் 600-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து ஆரஞ்சு கேப் ரேசில் டாப் ஃபார்மில் இருந்தார் சுப்மன் கில்.

அகமதாபாத் மைதானமும் அவருக்கு சாதகமான மைதானம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் வாழ்வா சாவா இறுதிப்போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என அகமதாபாத் மைதானத்தில் திரண்டிருந்த 1.3 லட்சம் குஜராத் ரசிகர்களும் பெரிதும் நம்பியிருந்தனர். இன்னிங்ஸை நிதானமாகத் தொடங்கிய கில், 10 ரன்கள் எடுத்த போது ஹேசல்வுட் வீசிய லென்த் பந்தை தவறான டைமிங்கில் ஆட முயன்று ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில்லுக்கு ஹேசல்வுட் ஒரு சிம்மசொப்பனமாகவே மாறிவிட்டார். சர்வதேச மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட டி20 கிரிக்கெட் வரலாற்றில், சுப்மன் கில் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறுவது இது 3-வது முறையாகும். இதுவரை டி20 கிரிக்கெட்டில் ஹேசல்வுட் பவுலிங்கில் 41 பந்துகளை எதிர்கொண்டுள்ள சுப்மன் கில், 59 ரன்கள் எடுத்து 3 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
இம்முறையும் கில்லின் பேட்டிங் பலவீனத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தி ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பிரேக்-த்ரூ கொடுத்துள்ளார் ஹேசல்வுட். குஜராத் அணியின் கேப்டன் கில் அவுட்டாகி விரக்தியுடன் பெவிலியன் திரும்பிய போது, மொத்த மைதானமும் சோகத்தில் மூழ்கி அமைதியானது. குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் முக்கியமான ஃபைனல் போட்டியில் இப்படி ஏமாற்றிவிட்டாரே எனத் தங்களது சோகத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆட்டத்தின் பவர்பிளே ஓவர்களிலேயே ரன் மெஷின் சுப்மன் கில்லை அவுட் செய்ய வேண்டும் என்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரின் வியூகம் கச்சிதமாக வேலை செய்துள்ளது. கில்லின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தியதன் மூலம், இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி ஆட்டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications