8 விக்கெட்ஸ்.. பிசிசிஐ கதவுகளை உடைக்க தொடங்கிய முகமது ஷமி.. ரஞ்சி சீசனில் டாப்பில் இருக்கும் சீனியர்
கொல்கத்தா: ரஞ்சி டிராபி தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ன் அரையிறுதிப் போட்டியில் பெங்கால் அணி தோல்வி அடைந்தது. இருப்பினும் இந்தப் போட்டியில் நட்சத்திர வீரரான முகமது ஷமி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய அணிக்குள் முகமது ஷமியால் இடம்பிடிக்க முடியவில்லை. ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், சீனியர் வீரரான முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு பிசிசிஐ தரப்பில் முறையாக விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனாலும் முகமது ஷமி கொஞ்சம் கூட மனம் தளரவில்லை.

தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். பெங்கால் அணிக்காக சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி என்று ஒவ்வொரு தொடரிலும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி சுற்றில் பெங்கால் அணியை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் அணி களமிறங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 328 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணி 302 ரன்கள் எடுத்தது. இதில் பெங்கால் அணிக்காக ஆடிய முகமது ஷமி 22.1 ஓவர்களில் 90 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் பெங்கால் அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதனால் ஜம்மு காஷ்மீர் அணி எளிதாக வென்றது. மொத்தமாக இந்தப் போட்டியில் முகமது ஷமி 9 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ரஞ்சி சீசனில் பெங்கால் அணிக்காக முகமது ஷமி 7 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இந்த 7 போட்டிகளில் முகமது 230 ஓவர்கள் வீசியுள்ளதோடு, 37 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார். அதில் 3 முறை 5 விக்கெட்டுகளுக்கும் அதிகமாகவும், ஒரு முறை 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இதனால் இந்த ஆண்டு டெஸ்ட் சீசன் தொடங்கும் போது முகமது ஷமி இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications