ஆரஞ்ச் கேப் எனக்குதான்.. மீண்டும் முதலிடத்திற்கு வந்த விராட் கோலி.. ஸ்ட்ரைக் ரேட்டை பாருங்க!
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஆர்சிபி அணியின் சீனியர் வீரரன விராட் கோலி 225 ரன்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். 37 வயதாகும் விராட் கோலி இப்போதும் கூட இளம் வீரர்களுக்கு சவாலாக இருந்து பேட்டிங் ஆடுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 146 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இம்பேக்ட் பிளேயராக வந்த விராட் கோலி 34 பந்துகளில் 49 ரன்களை விளாசினார். இதன் மூலமாக 5 இன்னிங்ஸில் 225 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இவருக்கு பின் ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் கிளாசன் 224 ரன்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.
தொடர்ந்து ஐதராபாத் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 213 ரன்களுடன் 3வது இடத்திலும், 200 ரன்களுடன் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 4வது இடத்திலும், ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 196 ரன்களுடன் 5வது இடத்திலும் இருக்கின்றனர். விராட் கோலி இந்த ரன்களை 162 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி இருக்கிறார். இருப்பினும் 37 வயதிலும் இளம் வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் விராட் கோலி ரன்களை சேர்த்து வருகிறார்.
இந்த 5 போட்டிகளில் விராட் கோலி 2 அரைசதங்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றியுள்ள விராட் கோலி, அதனை தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ரன்களை விளாசிய வீரர்களில் விராட் கோலி 973 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே 2016 மற்றும் 2024 ஆகிய சீசன்களில் விராட் கோலி ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்த முறையும் விராட் கோலியின் ஃபார்ம் தொடரும் பட்சத்தில் மீண்டும ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றுவார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications