இலங்கையில் 22,254 தமிழ் பவுத்தர்கள், 11 தமிழ் பிக்குகள் ... நாடாளுமன்றத்தில் திடுக் தகவல்
கொழும்பு: இலங்கையில் தற்போது 22,254 தமிழ் பவுத்தர்களும் 11 தமிழ் பிக்குகளும் இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அங்கு தமிழர்களை சிங்களமயமாக்கல்- பவுத்த மதத்தை தழுவ வைத்தல் என்பது தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பவுத்த மதத்தைத் தழுவியுள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. புத்திக பத்திரனவ எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக அளித்த பதில்:
2012ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் இலங்கையில் 22,254 தமிழ் பவுத்தர்களும் 11 தமிழ் பவுத்த பிக்குகள் உள்ளன. இதில் 470 தமிழ் பவுத்தர்கள் வடக்கில் வாழ்கின்றனர்.
மேலும் சிறிநந்தராம என்ற பெயரில் தமிழ் பவுத்த மத போதனைக்கான பள்ளிகூடம் ஒன்று யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டது. அதில் 80 சிறுவர்கள் கல்வி கற்றனர். தற்போது அது செயலிழந்துவிட்டது.
இவ்வாறு அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.
இதனிடையே அனுராதபுரம் பவுத்த பிக்குகள் பல்கலைக் கழகத்தின் புதிய நூலகத்தை அதிபர் மைத்ரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், பவுத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புகிற ஒரு மையமாக இலங்கை திகழும் என கூறியுள்ளார். இதனால் இலங்கையில் தமிழர்களை பவுத்தர்களாக்கும் முயற்சி தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அரச அதிபர் அருமைநாயகம், போருக்குப் பின்னர் கிளிநொச்சியில் மேம்போக்கான சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் மக்களுக்கான இழப்பீடுகள் முழுமையாக சென்றடையவில்லை. கிளிநொச்சியில் ஊட்டசத்து குறைபாடும் அதிகமாக காணப்படுகிறது என கவலை தெரிவித்திருக்கிறார்.
மேலும் மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் பிரதிநிதிகள்; அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஈழவர் ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications