சொந்த கட்சியில் சீட் மறுத்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி- ராஜபக்சே! கோதாவில் சந்திரிகாவும்..
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார். இதேபோல் மற்றொரு முன்னாள் அதிபரான சந்திரிகா குமாரதுங்கவும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அவரது சுதந்திர கட்சியின் மைத்ரிபால சிறிசேன, அமோக வெற்றி பெற்றார். அவருக்கு சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஆதரவளித்திருந்தனர்.

அதிபர் தேர்தல் முடிவடைந்த பின்னர் தீவிர அரசியலில் இருந்து மகிந்த ராஜபக்சே ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஆகஸ்ட் 17-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் தம்மை பிரதமர் வேட்பாளராக சுதந்திர கட்சி அறிவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மகிந்த ராஜபக்சே மேற்கொண்டார். ஆனால் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியோ திட்டவட்டமாக ராஜபக்சேவுக்கு சீட்டே கொடுக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்துவிட்டது.
இப்படி சொந்த கட்சியிலேயே தமக்கு போட்டியிட சீட் தர மறுத்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்சே, தாமும் தமது ஆதரவாளர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மக்களின் வேண்டுகோளை நிராகரிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிட்டு ஆட்சியை அமைப்போம். இந்த நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்றார். ஆனால் எந்த கட்சி சார்பாக தாம் போட்டியிட இருப்பதாக ராஜபக்சே தெரிவிக்கவில்லை.
இதனிடையே மற்றொரு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மகிந்த ராஜபக்சே தேர்தலில் போட்டியிடுவார் எனில் சந்திரிகாவும் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications