1,12,750 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை.. நீலகிரி மாவட்ட அதிகாரிகள் பகிர்ந்த சூப்பர் தகவல்
ஊட்டி : வறுமையில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் மகளிர் 1,12,750 பேர் பயனடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கூடுதலாக 1.40 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதால் புதிதாக ரேஷன் கார்டு வாங்குவோர் தாராளமாக விண்ணப்பிக்க முடியும்.
தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு சொத்துரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடு போன்றவை வழங்கப்பட்டன. அடுத்ததாக மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம் வழங்கப்பட்டது. இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து வறுமையில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான 15.9.2023 அன்று தொடங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு மாதமும் இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் எல்லா மாவட்ட மக்களுமே பயன்பெறுகிறார்கள். தேயிலை தோட்ட தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள், பலரும் பயன்பெறுகிறார்கள். இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குன்னூர் தாலுகாவில் 19,332 பேருக்கும், கூடலூர் தாலுகாவில் 22,950 பேருக்கும், கோத்தகிரி தாலுகாவில் 16,263 பேருக்கும், குந்தா தாலுகாவில் 6,718 பேருக்கும் கிடைத்துள்ளது.
பந்தலூர் தாலுகாவில் 20,019 பேருக்கும், ஊட்டி தாலுகாவில் 27,468 பேருக்கும் என மொத்தம் 1,12,750 பேருக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகையாக கிடைப்பதால் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்து, வறுமையை ஒழிக்க உறுதுணையாக உள்ளது" இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 1.40 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக திருமணம் ஆன குடும்ப தலைவிகள் விண்ணப்பம் செய்ய முடியும். அருகே உள்ள நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் சென்று இதற்கான விண்ணப்பங்களை பெறலாம்.
இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அதை பூர்த்தி செய்து கொடுக்கலாம். நாம் பூர்த்தி செய்த விண்ணப்பத்திற்கான அத்தாட்சி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஆக வரும். ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர், இ-சேவை மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.
புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இனி இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் இன்னும் ஓராண்டில் அதிக பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications