For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர சிறைகளில் உள்ள 172 தமிழர்கள் ஜாமினில் விடுவிப்பு: தமிழக அரசு தகவல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திர சிறைகளில் உள்ள 172 தமிழர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பல தமிழர்கள் ஆந்திர சிறைகளில் உள்ளதை அறிந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவ்வாறு ஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் விவரங்களை ஆந்திர காவல்துறையினரிடமிருந்து பெறுமாறு காவல் துறை தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

172 Tamils in Ap prisons released on bail

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆந்திர சிறைகளில் உள்ள 516 தமிழர்களின் விவரங்கள் காவல் துறை தலைமை இயக்குனரால் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 90 நாட்களுக்கு மேலாக சிறையில் வாடும் 516 தமிழர்களை பிணையில் உடனடியாக விடுவிக்கவும், அவர்களது வறிய நிலையை கருத்திற்கொண்டு அவர்களது வழக்கினை நடத்த போதிய இலவச சட்ட உதவிகளை வழங்குமாறும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு 15.10.2015 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதினார்.

அவரது நடவடிக்கைகள் காரணமாக ஆந்திர சிறைகளிலுள்ள 172 தமிழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 344 தமிழர்கள் இன்னமும் ஆந்திர சிறைகளில் உள்ளனர்.

ஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலவச சட்ட உதவி கோரும் மனுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்களால் பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட 312 கோரிக்கை மனுக்கள் தலைமைச் செயலரால் 29.10.2015 அன்று தமிழ்நாடு மாநில சட்ட உதவி ஆணையம் மூலம் ஆந்திர மாநில சட்ட உதவி ஆணையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி ஆந்திர சிறைகளில் உள்ளவர்களை பிணையில் வெளிக்கொணர இரண்டு அரசு வழக்கறிஞர்கள் தலைமையில் வழக்கறிஞர் குழு ஒன்று ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கறிஞர் குழு ஆந்திர மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்களில் பிணை மனுக்களை தாக்கல் செய்து அவர்களை பிணையில் வெளிக்கொணர தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். இதற்கான செலவின முன்பணமாக 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் பயனாக ஆந்திர சிறைகளில் உள்ள தமிழர்கள் விரைவில் பிணையில் வெளிவர வழிவகை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu government Press Release for Legal Aid for Tamilians at Andhra pradesh Prison
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X