இடியும் மின்னலுமாய் கொட்டப்போகும் மே மாத மழை..என்ஜாய்..வெதர்மேன் சொன்ன ஜில் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு இடியும் மின்னலுமாய் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூலான அறிவிப்பு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 4 நாட்களுக்கு மழை பெய்யும் சூழ்நிலைகள் நிலவுவதாகவும் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. வானிலை ஆய்வு மையம் சொன்னது போலவே பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையை பற்றியும் வானிலையை பற்றியும் கணிக்கும் வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளார்.

அடுத்த 4 நாட்களுக்கு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரைக்கும் பலத்த மழை பெய்யக்கூடும். பல இடங்களில் 100 மில்லி மீட்டர் வரை பதிவாகலாம். மே மாதம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வழக்கமாக குறைந்த காற்றழுத்தம் புயல் உருவாகும்போது மட்டுமே கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்.
இப்போது வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மே மாதத்தில் மழை பெய்வதற்கான சூழ்நிலை நிலவுகிறது.
தீபகற்ப இந்தியாவில் மேற்கு மற்றும் கிழக்குக் காற்று சந்திக்கும் பகுதி கடற்கரையை நோக்கி நகர்கிறது மற்றும் உட்புறங்களில் எப்போதும் நிலையானதாக இருக்காது. எனவே அடுத்த 1-4 நாட்களில் சென்னையிலும் மழை பெய்யும், மேலும் காலை வேளைகளில் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் மழை பெய்யும்.

இடியும் மின்னலும் ஆலங்கட்டி மழையும் வருமா? என்ற கேள்வி எழக்கூடும். நாம் ஏற்கனவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பார்த்திருப்போம், எப்பொழுதெல்லாம் மேல் முதல் நடு நிலை (200-500 hpa) காற்று கீழே இறங்குகிறதோ, அது மிக உயர்ந்த நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது மற்றும் அடிக்கடி ஆலங்கட்டி மழையுடன் தொடர்புடைய மிகத் தீவிரமான இடியுடன் கூடிய மழையை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பாலும் உட்புறத்தில் இந்த ஆலங்கட்டி மழை அதிகம் கிடைக்கும்.
பெங்களூரிலும் நல்ல இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இந்த மழையை அனுபவிக்கவும். மே மாதத்தின் இரண்டாவது பாதி நன்றாக இல்லை, ஒரு சக்கரம் உருவாகி பங்களாதேஷ் அல்லது பர்மாவை நோக்கி நகரும் பட்சத்தில், இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா முதல் தமிழ்நாடு வரை வெப்பநிலை அதிகரிக்கும். எனவே கடலோர மாவட்டங்களும் இந்த அரிய மே மாத மழையை அனுபவிக்கலாம் என்றும் வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications