பக்கத்திலேயே பதுங்கிய சிறுத்தை.. காரில் 6 மணிநேரம் தவித்த 5 பேர்.. திக்திக் திருப்பத்தூர்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்து பெயிண்டரை தாக்கிய சிறுத்தை, குடியிருப்புக்குள் நுழைந்து கார் கார் ஷெட்டுக்குள் பதுங்கி உள்ளது. சிறுத்தையை பார்த்தவுடன் அங்கிருந்த 5 பேர் காரில் ஏறி கதவை மூடிய நிலையில் அவர்கள் அருகேயே அந்த சிறுத்தை 6 மணிநேரமாக பதுங்கி இருந்தது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் அருகே மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெயிண்ட் பணி நடக்கிறது. இன்று மாலையில் திடீரென்று பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த சிறுத்தை பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்ட திருப்பத்தூரை சேர்ந்த 55 வயது கோபாலை தாக்கிவிட்டு அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது.

இதில் கோபால் தலையில் காயமடைந்துள்ள நிலையில் அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து பள்ளியில் உள்ள மாணவிகள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை கார் ஷெட்டுக்குள் சென்று பதுங்கியது. அப்போது அங்கு இருந்த 5 பேர் சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அலறியடித்தபடி அருகே இருந்த காருக்குள் ஏறி பதுங்கி கொண்டனர். காருக்குள் அவர்கள் இருப்பதை பார்த்த சிறுத்தை அவர்களை உற்று கவனித்த சிறுத்தை அவர்கள் பதுங்கியுள்ள காரின் அருகே உள்ள இன்னொரு காரின் அருகே பதுங்கியது.
இதனால் அவர்கள் அச்சமடைந்தனர். திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். வனத்துறையினர் கார் ஷெட்டை சுற்றி வலை விரித்து சிறுத்தை வெளியே வராத வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அதோடு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை சிறுத்தை என்பது பிடிபடிவில்லை.
இதனால் கார் ஷெட்டுக்குள் பதுங்கிய 5 பேர் கடந்த 6 மணிநேரமாக அங்கேயே தவித்தனர். இறுதியாக வனத்துறையினர் அவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட ஆரோக்கியசாமி, தினகரன், இம்ரான், அஸ்கர் கான், வெஙகடேசன் ஆகியோர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முன்னதாக சிறுத்தை பிடிக்க ஓசூரில் இருந்து கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். கார் ஷெட்டுக்குள் பதுங்கி உள்ள சிறுத்தைக்கு மயக்கஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் சுற்றிலும் குடியிருப்பு பகுதி உள்ளது. இதனால் சிறுத்தையை தப்பிக்க விடாமல் பிடிப்பது அவசியமாகும். இதனால் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இணைந்து சிறுத்தையை தப்பிக்க விடாமல் மயக்கஊசி செலுத்தி பிடிப்பதற்கு சரியான திட்டம் தீட்டி மிகவும் கவனமாக செயல்பட்டனர்.
அதோடு சிறுத்தை இருக்கும் இடம் பற்றி அதிகாரிகள் வீடியோ காலில் காருக்குள் சிக்கி இருந்தவர்களிடம் கேட்டறிந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் இருக்கும் காரின் அருகே உள்ள இன்னொரு காருக்கு அடியில் சிறுத்தை பதுங்கி உள்ளது. இன்னும் கூட அந்த சிறுத்தை ஆக்ரோஷமாக உள்ளதாக தெரிவித்தனர். தற்போது 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று இரவு வரை சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்கவில்லை. தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க அவர்கள் முயற்சி செய்து வந்தனர். இதற்கிடையே சிறுத்தை நுழைந்துள்ளதால் திருப்பத்தூர் நகரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று கட்டாய விடுப்பு என்பது அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications