For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா ஆட்சியை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும்: தேமுதிக தீர்மானம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேமுதிகவின் மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் என்ற பகுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி தலைவர் சுதிஷ், தேமுதிக எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் வாசித்தார். அதன் விவரம்:

5 resolutions passed in kanchipuram DMDK Conference

தீர்மானம்1:

தமிழகத்தில் லஞ்சமும், ஊழலும் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற கொள்கையில்தான் தேமுதிக உருவானது.
ஆனால் தற்போது நடைபெறுகின்ற ஜெயலலிதாவின் ஆட்சியில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் லஞ்சம் புகுந்து ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற வகையில் தமிழகத்தின் அனைத்து அரசு துறைகளும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டது.

"அரசன் எவ்வழியோ, அமைச்சர்களும் அவ்வழியே" என்ற அடிப்படையில், தமிழகம் இதுவரை காணாத இமாலய ஊழல் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்திலிருந்து ஜெயலலிதா ஆட்சியை அகற்றினாலே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும். எனவே ஊழல் இல்லாத நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திட தேமுதிக பாடுபடுமென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்-2:

தொலைநோக்குப் பார்வையில் எந்தவித வளர்ச்சி திட்டங்களும் இல்லாமல் கவர்ச்சித் திட்டங்களின் மூலமாக, தமிழக மக்களை ஏமாற்றுகின்ற ஜெயலலிதாவின் ஆட்சியில் விவசாயமும், நெசவும் நலிவடைந்துபோய், தொழில் வளர்ச்சி ஏதுமின்றி, உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது.

தமிழகத்தில் சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தி, சுமார் 4.5௦ லட்சம் கோடி ரூபாய் கடனை உருவாக்கி, அதன்மூலம் தமிழகத்தில் பிறக்கும் குழந்தை உட்பட ஒவ்வொருவர் மீதும் 33 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தி, தமிழக மக்களை கடனாளிகளாக, ஜெயலலிதா மாற்றியுள்ளார்.

வெற்று அறிவிப்புகளை அறிவிக்கும் போதெல்லாம் நான், எனது, எனது தலைமையிலான அரசு எனக்கூறும் ஜெயலலிதா, இந்த அதிமுக அரசு வாங்கிய கடனை கூறும்போதும் நான், எனது, எனது தலைமையிலான அரசு வாங்கிய கடன் என்று பெருமையோடு கூறவேண்டியதுதானே. ஆகமொத்தத்தில் தமிழகத்தின் வளர்ச்சியை பூஜ்ஜியமாக மாற்றிய (ZERO PERCENT DEVELOPMENT) முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

5 resolutions passed in kanchipuram DMDK Conference

தீர்மானம் - 3:

தமிழக சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் சுமார் 84 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்துவிட்டு, அதற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் நிதியை ஒதுக்கி, வெற்று அறிவிப்பு ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடு செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட 2.42 லட்சம் கோடி ரூபாயில், எந்த தொழில் நிறுவனமும் தமிழகத்தில் தொழில் துவங்கவில்லை.

காவிரி, முல்லை பெரியாறு, விவசாயம், நெசவு, சிறு, குறு, நடுத்தர தொழில் என எந்த பிரச்சனைகளும் அதிமுக ஆட்சியில் தீர்க்கப்படவில்லை.
மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று கூறினாலும், தனியாரிடம் அதிக விலை கொடுத்து 3ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வாங்கி, மின்சாரவாரியமே திவாலாகும் நிலையில் உள்ளது. ஐந்தாண்டு ஆட்சியில் எந்தவொரு புதிய மின்னுற்பத்தி திட்டத்தையும் துவங்காமல் மக்களை ஏமாற்றுகின்ற ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் அரசாங்கத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம்-:4:

தமிழகத்தில் கவர்ச்சித் திட்டங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைத்திட செய்வோம். சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்து வசதிகளை எளிதாக்கி, தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, வறுமையை ஒழித்திட, படித்த, படிக்காத இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கிடுவோம்.

குடிசை இல்லா நகரங்களை நிர்மானித்து, அனைவருக்கும் சொந்த வீடு என்கின்ற லட்சியத்தை அடையும் வகையில், தமிழகத்தின் வளர்ச்சிக்குரிய திட்டங்களை தேசிய முற்போக்கு திராவிட கழகம் செயல்படுத்தும் என்ற தீர்மானத்தை இந்த மாநாடு ஏகமனதாக வரவேற்று அங்கீகரிக்கிறது.

தீர்மானம்-5:

தமிழகத்தில் விவசாயமும், நெசவும் தன்னிறைவு அடையும் வகையில், விவசாயத்திற்கும், ஜவுளி தொழிலுக்கும் தேவையான கடன் மற்றும் மானியம் வழங்குதல், வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும்.
தமிழகத்தில் உள்ள நதிகள் இணைக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் இல்லாமல் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு செம்மை படுத்தப்படும். சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட்டு தமிழகம் சிறந்த சுற்றுலா மையமாக்கப்படும்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் இதுபோன்ற நல்ல பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு, தமிழக மக்கள் தேமுதிகவிற்கு உறுதுணையாக இருக்கவேண்டும். தற்போது நடைபெறுகின்ற ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை இந்த மாநாடு ஏகமனதாக வரவேற்று அங்கீகரிக்கிறது.

English summary
5 resolutions passed in kanchipuram DMDK Conference
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X