மூச்சுமுட்டிய பொதுக்கூட்டம்.. தென்காசியில் எடப்பாடியின் பரப்புரையில் நெரிசலில் சிக்கி முதியவர் பலி
தென்காசி: தென்காசி அருகே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதியவர் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒருபகுதியாக தென்காசி தொகுதி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரசாரம் செய்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறது. நீட் தேர்வு ரத்து, அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எனக்கூறி ஏமாற்றி உள்ளது. கடந்த 3 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு திமுக கொண்டு செல்லவில்லை என விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் தான் அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பங்கேற்ற முதியவர் ஒருவர் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 60 வயது நிரம்பிய வள்ளிநாயகம் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் கூட்டத்தில் சிக்கி பலியாகி உள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications