கண்ணகி கோவிலுக்கு பாதை அமைக்க கோரிக்கை.. கையில் சிலம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு!
கண்ணகி கோவிலுக்கு பாதை அமைக்கக்கோரி கையில் சிலம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம்: கண்ணகி கோவிலுக்கு செல்ல பாதை அமைத்துத்தரக்கோரி கையில் சிலம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குமுளியில் இருந்து 14 கிமீ தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடியில் இருந்து 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில்.
கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு, ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி தினத்தன்று மட்டுமே தமிழகத்தில் இருந்து பக்தர்கள் சென்று வழிபட்டு வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இரு மாநில பக்தர்கள்
வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர்.

மலைப்பாதையில் நடைபயணம்
சித்திரை முழுநிலவு நாளை தவிர மற்ற நாட்களில் இங்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த கோவிலுக்கு செல்ல 6 கிலோ மீட்டர் தொலைவு மக்கள் மலைப்பாதையில் நடந்து செல்கின்றனர்.

அரசு கண்டுகொள்ளவில்லை
கண்ணகி கோவிலுக்கு செல்ல சாலை வசதி அமைத்துத்தரக்கோரி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.

கையில் சிலம்புடன்
இந்நிலையில் கண்ணகி கோவிலுக்கு சாலை அமைத்துத்தர வலியுறுத்தி கம்பத்தை சேர்ந்த நர்மதா என்ற பெண் கையில் சிலம்புடன் கண்ணகி கோவிலுக்கு நடந்து சென்றார்.

கண்ணகி போல் சென்ற பெண்
இதையடுத்து அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய வனத்துறையினரும் போலீசாரும் அவரது கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பெண் ஒருவர் தலைவிரி கோலமாக கையில் சிலம்புடன் கண்ணகியை போல் நடந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications