கஞ்சா போதையில் தண்டவாளத்தில் சண்டை போட்ட மாணவர்கள்.. பதறிப்போன அரக்கோணம் ரயில் நிலையம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் மாணவர்கள், தண்டவாளத்தில் கட்டிப்புரண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைக்கு இளம் சிறார்கள் பலர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி சீரழியும் அவலம் ஏற்பட்டுள்ளது. இளம் சிறார்கள் சர்வ சாதாரணமாக மதுபானங்களை பருகும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. மது போதை ஒரு பக்கம் எனில், கஞ்சாவிற்கும் அடிமையாகி புகைத்தபடி சுற்றுகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு காட்டுப்பகுதிளில் ஏராளமான சாராய பாட்டில்களும், கப்புகளையும் பார்க்க முடியும். அந்த அளவிற்கு மது போதையில் சுற்றுகிறார்கள்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் மாணவர்கள், தண்டவாளத்தில் கட்டிப்புரண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை அன்று, சீருடை அணிந்தபடி 2 மாணவர்கள் வந்தனர். அவர்கள் 5-வது பிளாட் பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் இறங்கி தள்ளாடியபடி நடந்து சென்றுள்ளார்கள். அதில் ஒரு மாணவர் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்திருக்கிறார். இதை கண்ட மற்றொரு மாணவர், தாங்கிப் பிடிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த மாணவனும் போதையில் கீழே விழுந்தார். 2 மாணவர்களும் போதையில் ஒருவரையொருவர் தூக்க முயற்சித்தனர். ஆனால் தள்ளாடியபடி 2 பேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரெயில்கள் வராததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனை அங்கிருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து 2 மாணவர்களையும் பிடித்து விசாரித்தனர். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், அரக்கோணம் மற்றும் சித்தேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வருவதும், கஞ்சா போதையில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று தடுமாறி விழுந்ததும் தெரியவந்தது.
கஞ்சா போதையில் மாணவர்கள் ரெயில் தண்டவாளத்தில் கட்டிப்புரண்ட சம்பவத்தை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அரக்கோணம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications