For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவில் இருந்து விலகிய குஷ்பு… பாஜகவில் இணைகிறார்? பின்னணி தகவல்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவிலிருந்து கனத்த இதயத்தோடு விலகுவதாக பிரபல நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேருவார் எனத் தெரிகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இயக்குநர் சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டு இரு மகள்களுக்கு தாயானதோடு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

சினிமாவைத் தொடர்ந்து டிவி சீரியல்களில் நடித்த குஷ்பு, ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாகவும், அதிமுகவில் இணையப்போவதாகவும் அப்போது பேசப்பட்டது.

திமுகவில் குஷ்பு

திமுகவில் குஷ்பு

இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு மே 15ம் தேதி தான் அரசியலில் இணையபோவதாக அறிவித்த குஷ்பூ, திமுகவில் இணைத்து கொண்டார்.

ஜெயா டிவி டூ கலைஞர் டிவி

ஜெயா டிவி டூ கலைஞர் டிவி

இதனையடுத்து ஜெயா டிவி நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக குஷ்பு வெளியேற்றப்பட்டார். கலைஞர் டிவியின் மானட மயிலாட நிகழ்ச்சி நடுவராகவும், அங்கே தொடர்களை தயாரித்து நடிக்கவும் தொடங்கினார்.

சூறாவளி பிரசாரம்

சூறாவளி பிரசாரம்

நடிப்பு, அரசியல் என்று பிஸியாக இருந்த வந்தார் குஷ்பூ. மேலும் திமுக., சம்பந்தப்பட்ட அனைத்து கட்சி மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்று வந்தார். திமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்த குஷ்பு, 2011 சட்டசபை தேர்தல் மற்றும் 2014 லோக்சபா தேர்தல்களில் திமுகவுக்காக பிரசாரம் செய்தார்.

விலகிய குஷ்பு

விலகிய குஷ்பு

இந்நிலையில் சமீபகாலமாக கட்சியில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்த குஷ்பூ, திடீரென திமுக., கட்சியை விட்டு முழுவதுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

திமுக குடும்ப அரசியல்

திமுக குடும்ப அரசியல்

முன்னதாக குஷ்பு திமுகவில் சேர்ந்ததிலிருந்தே திமுகவில் ஒருதரப்பில் அவரது வருகை கசப்புணர்வுடன் பார்க்கப்பட்டது.குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி வீட்டிலேயே அவர்களது வீட்டு பெண்கள் மத்தியில் குஷ்பு வெறுப்புக்குள்ளானதாக கூறப்பட்டது.

தலைவர் கருத்தால் சர்ச்சை

தலைவர் கருத்தால் சர்ச்சை

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குஷ்பு, " திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் ( மு.க. ஸ்டாலின்) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்" என்று கூறியிருந்தார்.

தாக்கப்பட்ட குஷ்பு

தாக்கப்பட்ட குஷ்பு

அவரது இந்த பேட்டி வெளியானதும் திமுக இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே, குறிப்பாக ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் திருமணம் ஒன்றிற்கு திருச்சிக்கு சென்ற குஷ்பு, அங்குள்ள ஓட்டலில் வைத்து திமுகவினரால் தாக்கப்பட்டார்.

கல்வீசிய தொண்டர்கள்

கல்வீசிய தொண்டர்கள்

குஷ்பு மீது செருப்பும் வீசப்பட்டது. அதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்ட கார் கண்ணாடிகள் உடைந்தன. தாக்குதல் நடந்தபோது குஷ்பு கணவர் சுந்தர் சி. இல்லாத நிலையில், அவர்களது குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

ஓரம்கட்டப்பட்ட குஷ்பு

ஓரம்கட்டப்பட்ட குஷ்பு

இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தை பெரிதுபடுத்தாத குஷ்பு, தனது பேட்டி தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறியிருந்தார். ஆனாலும் அப்போதிருந்தே குஷ்பு திமுகவில் ஓரம்கட்டப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

தலையிட்ட கருணாநிதி

தலையிட்ட கருணாநிதி

இருப்பினும் கருணாநிதியின் தலையீடால், திமுக மாநாடு போன்ற, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குஷ்பு அழைக்கப்பட்டார். ஆனால் இதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆதரவாளர்கள் விரும்பவில்லை எனக்கூறப்பட்டது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

இதனிடையே நடந்தமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குஷ்புவுக்கு சென்னையில் போட்டியிட வாய்ப்பளிக்க கருணாநிதி விரும்பியதாகவும், ஆனால் அதற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்த்தோடு வேட்பாளர்களையும் அவரே தேர்வு செய்தார். எனவே குஷ்புவின் கனவு நிறைவேறாமல் போனது.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான அறிவிப்பு பட்டியலிலும் முதலில் குஷ்புவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் கோபம் கொண்ட குஷ்பு டெல்லிக்கு பறந்தார். அப்போதே அவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைவார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

மறுத்த குஷ்பு

மறுத்த குஷ்பு

ஆனால் அவற்றை குஷ்பு உடனடியாக மறுத்தார். பின்னர் கருணாநிதியின் தலையீட்டின் பேரில் திமுகவின் முன்னணி பிரசார பேச்சாளர்களின் லிஸ்டில் குஷ்பு பெயர் இடம் பெற்றது. அவரும் பிரசாரத்திற்கு கிளம்பினார்.

சொதப்பிய குஷ்பு

சொதப்பிய குஷ்பு

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் குஷ்புவின் பேச்சு எடுபடவில்லை. பல இடங்களில் சொதப்பினார். ஓரு கட்டத்தில் பொய், பித்தலாட்டம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு இதுல திமுகவை அதிமுக ஓவர்டேக் பண்ணிட்டாங்க என்று கூறி அதிர்ச்சியளித்தார். இது வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது.

பாதியில் முடிந்த பயணம்

பாதியில் முடிந்த பயணம்

இதனையடுத்து குஷ்புவின் பிரசார பயணம் பாதியில் முடித்துக்கொள்ள கூறப்பட்டது. அவரும் உடல்நிலையை காரணம் கூறி ஓய்வு அறிவித்தார். டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

திமுக படுதோல்வி

திமுக படுதோல்வி

இந்நிலையில்தான் கட்சியில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது மற்றும் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அடைந்த படுதோல்வி போன்றவை குஷ்புவை இனியும் திமுகவில் நீடிக்கவேண்டுமா? என்று யோசிக்க வைத்ததாக தெரிகிறது.

பாஜக ஆதரவு நிலை

பாஜக ஆதரவு நிலை

இதற்கிடையேதான் அவர், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள சுஷ்மா சுஷ்மா சுவராஜுக்கும், ஸ்மிருதி இரானிக்கும் தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். அப்போதே இது அரசியல் வட்டாரத்தில் பலரையும் யோசிக்க வைத்தது.

படிப்பு சர்ச்சைக்கு ஆதரவு

படிப்பு சர்ச்சைக்கு ஆதரவு

இந்நிலையில்தான் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதியைப்பற்றி சர்ச்சை எழுந்தபோது, " சாதிப்பதற்கு கல்வி தகுதி அவசியம் இல்லை. சச்சின் டெண்டுல்கர், பில்கேட்ஸ், ரஜினி, கமல் உள்ளிட்டோர் உலக அளவில் புகழ் பெற்றுள்ளனர். இவர்கள் பட்டபடிப்பு படித்தவர்கள் அல்ல. திறமைதான் முக்கியம்; படிப்பு அல்ல" என்று இரானிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் குஷ்பூ.

அடித்தளம் போட்ட குஷ்பு

அடித்தளம் போட்ட குஷ்பு

இதனால் பாஜகவில் குஷ்பு சேர வாய்ப்புள்ளதாக மீண்டும் செய்திகள் வெளியாகின. ஆனால் இம்முறை குஷ்புவிடம் இருந்து மறுப்பு செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போலவே திமுகவில் இருந்து வெளியேறிவிட்டார் குஷ்பு.

பாஜகவில் முக்கியத்துவம்

பாஜகவில் முக்கியத்துவம்

திமுகவில் இருந்து குஷ்பு விலகிவிட்டதால், அவர் விரைவில் பாஜகவில் சேருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தெரிகிறது. ஸ்மிருதி இரானி , நஜ்மா ஹெப்துல்லா போன்றவர்களுக்கு பாஜகவில் அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்த்த குஷ்பு தாமும் பாஜகவில் இணைந்தால் அரசியலில் நல்ல எதிர்காலம் அமையலாம் என்ற முடிவுக்கு குஷ்பு வந்திருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவிலும் குஷ்புவிற்கு வரவேற்பு இருக்கும் என்றே கூறப்படுகிறது.

திமுகவில் இருந்து விலகிய குஷ்பு- வீடியோ

English summary
Actor Kushboo Sundar, a prominent face of DMK, on Monday quit the party sulking over being “sidelined,” saying her hard work continued to be an “one-way path”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X