அந்த மாதிரி வெள்ளம் வந்தால் காலிதான்.. இப்போதே அடையாற்றை ரெடி செய்யும் சென்னை விமான நிலைய அதிகாரிகள்
சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்திய விமான நிலையம் பட்டியலிட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மிதந்ததை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு சென்னைக்கு குடிநீர் ஆதாரமான ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், சில ஏரிகளின் கரைகள் உடைப்பு ஏற்பட்டும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்தது.
இதனால் ஆங்காங்கே கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்து கொண்டது. அடையாறு ஆறு நிரம்பி வெள்ள பெருக்கெடுத்து ஓடியதால் விமான நிலையம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சி அளித்தது.

இந்தாண்டு மழை அதிகம்
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கடந்த 2015-ஆம் ஆண்டை போல் சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மிதப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விமான நிலைய அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.

2015-வெள்ளத்தில் இருந்து...
கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் சென்னை மாநகராட்சிக்கு பாடம் கற்று கொடுத்துவிட்டது. எனவே அடையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு நுழையாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமானது விமான நிலையம் அருகே செல்லும் அடையாற்றின் வடிகால்களை தூர்வாருவது ஆகும்.

அடையாறு தூர்வாரல்
அடையாறு ஆற்றின் வடிகால்களை தூர்வாரினால் அதிகப்படியான தண்ணீர் சேகரிக்கப்பட்டு வெள்ள பெருக்கு ஏற்படாத வண்ணம் தடுக்கலாம். மேலும் விமான நிலைய கட்டடங்களை ஆய்வு செய்வது, வெள்ள நீரை வெளியேற்றும் மோட்டார்கள் மற்றும் அதன் மின் கேபிள்களை சரிபார்ப்பது, குறிப்பாக விமான நிலைய ஓடுதளத்துடன் தொடர்புடைய கேபிள்களை சரிபார்ப்பது உள்ளிட்டவை அந்த முன்னெச்சரிக்கை பட்டியலில் அடங்கும்.

ரன்வே பிரிட்ஜில் சுத்தப்பணிகள்
ஆற்றின் வடிகால்களில் 500 மீட்டர் தூரத்துக்கு உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக்குகளை அகற்ற விமான நிலையம் முனைப்பு காட்டி வருகிறது. இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் ஜி.சந்திரமௌலி கூறுகையில், 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். விமான நிலையம் அருகே உள்ள அடையாற்றை தூர்வாரும் பணிகள் இன்னும் சில நாள்களில் தொடங்கும்.

உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு...
அடையாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கால் மட்டும் தண்ணீர் சூழவில்லை, வடிகால்களில் இருந்தும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த வடிகால்களை அகலப்படுத்துவதன் மூலம் இதில் அதிகப்படியான தண்ணீர் சேமிக்க முடியும்.
விமானம் மூலம் சென்னை ஐஐடியினர் ஆய்வு நடத்தியதில் விமான நிலையத்துக்கு வெளியே பிரச்சினைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை குறித்து உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு செல்லப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications