சென்னையை அடுத்து கடலூரில் கொத்துக் கொத்தாக உயிரிழந்த காகங்கள்.. மக்கள் அச்சம்!
சென்னை: சென்னையை தொடர்ந்து கடலூர் அருகே பெரியகங்கணாங்குப்பத்தில் கொத்துக் கொத்தாக காக்கைகள் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பறவை காய்ச்சலாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் சென்னை இந்திரா நகர், நீலாங்கரை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காகங்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தன. 1000த்தும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, பறவை காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வந்தது. பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இறந்த பறவையை நேரடியாகத் தொடுவது, வைரஸ் தொற்றும் அபாயத்தை மனிதர்களுக்கு அதிகரிக்கிறது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னையைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதிகளிலும் இதுபோல ஏராளமான காக்கைகள் இறந்து கிடந்தன. இந்நிலையில், கடலூர் அருகே பெரியகங்கணாங்குப்பத்தில் ஏராளமான காக்கைகள் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பறவைக்காய்ச்சல் இருக்குமோ என அச்சம் எழுந்துள்ளதால், கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இறந்து கிடக்கும் காக்கைகளை கோழிகள் கொத்தித் தின்பதால், உயிரிழந்த காகங்களை அப்பகுதி மக்கள் ஆழமான பள்ளம் தோண்டி புதைத்தனர்.
இந்நிலையில், காகங்களின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து கால்நடைத்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறந்து கிடக்கும் காகங்களை ஆய்வுக்காக நாமக்கல் ஆய்வகத்திற்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications