'கழக துணைப் பொதுச்செயலாளர்..'தினகரன் மீது பல நாட்களுக்கு பிறகு ஜெயா டி.வி திடீர் பாசம்
ஜெயா டி.வி செய்திகளில் கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் என்று பல நாட்களுக்கு பிறகு குறிப்பிடப்பட்டு உள்ளது.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜெயா டி.வி.,யில் மீண்டும் பல நாட்களுக்கு பிறகு டி.டி.வி தினகரனை கழக துணைப்பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகிறது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைகாட்சியாக விளங்கி வந்த ஜெயா டி.வி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட பிரச்னைகளை அடுத்து டி.டி.வி தினகரன் அணியை ஆதரித்து வந்தது.
இந்த தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன்.இவரும், டி.டி.வி தினகரனும் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இரண்டாக உடைந்த கட்சி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரும், ஜெயா தொலைக்காட்சியும் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணி, தினகரன் அணியாக இரண்டாக உடைந்து இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்தது. எப்படியாவது சசிகலா குடும்பத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஜெயா டி.வியை தங்கள் வசமாக்க நினைத்து ஆளும் தரப்பு பல நெருக்கடிகள் கொடுத்தது.

சுயேச்சையாக களமிறங்கிய டி.டி.வி
அப்போதும் கூட சசிகலாவை அதிமுகவின் கழக பொதுச்செயலாளர் என்றும், தினகரனை துணைப்பொதுச்செயலாளர் என்றுமே குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வந்தது ஜெயா தொலைக்காட்சி. இந்நிலையில் , கடந்த மாதம் வெளியான தீர்ப்பின்படி, இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ் -ஈ.பி.எஸ் அணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், கட்சி பெயரையோ, சின்னத்தையோ உபயோகித்தால் வழக்கு பாயும் என்று தீர்ப்பு வெளியானதால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் கூட புதிய கொடியோடு சுயேச்சை வேட்பாளராகவே டி.டி.வி தினகரன் களம் இறங்கினார்.

மீண்டும் ஜெயாவில் தினகரன்
இதனையடுத்து இத்தனை நாட்களாக ஜெயா டி.வி செய்திகளில் டி.டி.வி தினகரன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்த நிலையில் , இன்று ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கை செய்திகளில் ‘கழக துணைப்பொதுச்செயலாளர்' டி.டி.வி தினகரன் முன்னிலை என்று குறிப்பிட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி சிறிது நேரமே ஆகி உள்ள நிலையில், டி.டி.வி தினகரன் மற்ற அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., வீடியோ மனக்கசப்பு ?
மேலும், தொண்டர்களும் மக்களும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையை விரும்பவில்லையோ என்கிற அச்சத்தையும் அதிமுக முண்ணனி தலைவர்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஜெயா தொலைக்காட்சி டி.டி.வி தினகரனை கழக துணைப்பொதுச்செயலாளர் என்று முன்னிலைப்படுத்தி இருப்பது பலரிடையே அணி மாறும் எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. மேலும், தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதால் சசிகலா குடும்பத்தினரிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பு இதன் மூலம் நீங்கி இருப்பதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications