விஜய் போல் சொகுசாக வாழவில்லை.. 35 ஆண்டுகளாக சரியான நேரத்திற்கு தூங்கியதே கிடையாது.. திருமாவளவன்!
தர்மபுர்: சினிமாவில் நன்றாக சம்பாதித்து சொத்து சேர்த்துவிட்டு சொகுசாக வாழ்ந்து அரசியலுக்கு வருகிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் மறைமுகமாக தவெக தலைவர் விஜய்-ஐ விமர்சித்துள்ளார். சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் பெறுவதாக கூறியுள்ள அவர், 35 ஆண்டுகள் அரும்பாடுபட்டு உழைத்த பின்னரே விசிகவிற்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய் மத்திய மற்றும் மாநில அரசை கடுமையாக சாடினார். அதேபோல் தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தமிழ்நாட்டின் நம்பிக்கை விஜய் மட்டும்தான்.

தவெக 2026ல் ஆட்சி அமைக்கும். அப்போது தமிழ்நாட்டில் தோனியை விடவும் மிகவும் பிரபலமான பீஹாரியாக பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று தெரிவித்தார். இன்னும் ஒரு இடைத்தேர்தலில் கூட போட்டியிட்டு பலத்தை நிரூபிக்காத நிலையில், விஜய் 2026ல் ஆட்சியை பிடிப்போம் என்று பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் பாஜக மற்றும் இந்தி திணிப்பு என்ற வார்த்தைகளையே கூறாமல் விஜய் தொடர்ந்து அரசியல் பேசி வருவதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், தேர்தல் அரசியலுக்கு வராததோடு சேர்த்து கணக்கிட்டால் மொத்தமாக 35 ஆண்டுகள் அரசியல் பயணம் செய்திருக்கிறோம். ஒரு மாநில கட்சி அந்தஸ்தை பெறுவதற்கே பெரும்பாடுபட நேர்ந்தது.
சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து பொருளை தேடி, சுகத்தை தேடி சொகுசாக வாழ்ந்துவிட்டு இளமை காலத்தை சொகுசாக கழித்துவிட்டு தேவையான அளவிற்கு சொத்து சேர்த்து வைத்து கொண்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் ஊர் ஊராக இப்படி சென்று அலைய வேண்டியதில்லை.
ஊர் ஊராக சென்று கொடியேற்ற தேவையில்லை. ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து பேச தேவையில்லை. உடனடியாக கட்சியை தொடங்கலாம், ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் என்னுடைய இளமையை தொலைத்து தூங்காமல், சாப்பிடாமல், வாழாமல், ஓய்வெடுக்காமல், பொழுதுபோக்கு இல்லாமல், விடுமுறை இல்லாமல், சுற்றுலா செல்லாமல், நல்ல சாப்பாடு கூட சாப்பிடாமல் 35 ஆண்டுகள் பாடுபட்டிருக்கிறேன்.
இப்படிதான் இந்த இடத்தை அடைந்துள்ளோம். மாநில கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு வாழ்க்கையை இழந்து இழப்புகளை சந்தித்துதான் பிடித்திருக்கிறோம். அப்படியிருந்தும் நம் வளர்ச்சியை பிடிக்காமல் சாதி வெறிபிடித்த கும்பல், விசிக கொடிக் கம்பத்தை வெட்டி சாய்க்கிறார்கள். மத வெறி பிடித்த கும்பல் நமக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications