ஶ்ரீரங்கம் கருவறைக்குள் பிரதமர் மோடியை அனுமதிக்க கூடாது- அயோத்தியை தொடர்ந்து இங்கேயும் எதிர்ப்பு!
ஶ்ரீரங்கம்: ஶ்ரீரங்கம் கோவில் கருவறைக்குள் பிரதமர் நரேந்திர மோடியை அனுமதிக்கக் கூடாது; அது ஆகமங்களுக்கு எதிரானது என்கிற எதிர்ப்பு குரல் ஶ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22-ந் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுவதற்கு சங்கராச்சாரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தி ராமர் கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் திறக்க கூடாது; பிரதமர் மோடி கோவிலில் சிலையை பிரதிஷ்டை செய்வது சனாதனங்களுக்கு எதிரானது என்பது சங்கராச்சாரியார்களின் எதிர்ப்பு.

இதனிடையே பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். வரும் 21-ந் தேதி தமிழ்நாட்டின் ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம் செய்ய வருகை தருகிறார். இந்நிலையில் ஶ்ரீரங்கம் கோவில் கருவறைக்குள் பிரதமர் மோடியை அனுமதிப்பது ஆகமத்துக்கு எதிரானது என கோவில்கள் தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடரக் கூடிய ரங்கராஜன் நரசிம்மன் குரல் எழுப்பியிருப்பது சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பி உள்ளது.
ரங்கராஜன் நரசிம்மன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
- கருவறைக்குள் யாரும் நுழைந்துவிட முடியாது
- கடவுளுக்கு மலர்கள் உள்ளிட்டவைகளால் நேரடியாக பூஜை செய்ய முடியாது.
- கருவறைக்குள் போவது, கடவுளுக்கு பூஜை செய்வது அர்ச்சகர்கள்தான். ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்கு என தனியே புனிதமான நந்தவனமும் உள்ளது.
- அர்ச்சகர்கள்தான் ஆரத்தி காட்ட வேண்டும்- பக்தர்கள் அதை செய்யக் கூடாது.
- இடதுகையை பயன்படுத்துவது அமங்களத்தின் குறியீடு. ஆகையால் ஆலயங்களில் வலது கையை பயன்படுத்த வேண்டும்

இவற்றை எல்லாம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமர் மோடி ஶ்ரீரங்கம் வருவதற்கு முன்னதாக அவரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு ரங்கராஜன் நரசிம்மன் பதிவிட்டுள்ளார்.
ரங்கராஜன் நரசிம்மனின் பதிவிட்டுக்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. அவரது எக்ஸ் பக்கத்தில், @shunmuga_priyan என்ற நெட்டிசன், மக்கள் வரிப்பணம் அதில் கோயிலை கட்டிவிட்டு அரச்சகர் மட்டும் உள்ள போகவேண்டும் என்று சொல்வது எல்லாம் என்ன ஒரு மனநிலை. ஒன்னு எல்லாரையும் உள்ள விடு இல்லைன்னா மக்கள் வரிப்பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அரச்சகரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல ஏராளமானோர் அந்த பதிவில் எதிர்க் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications