அமித்ஷா சந்திப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கும் 10 ஆதாயங்கள்- செம்ம ஸ்கெட்ச்சாக இருக்கே சாமீ!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள், ஏகடியங்கள் வைக்கப்படுகின்றன.. டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததை முன்வைத்தும் கூட கடும் விமர்சனங்கள் கொட்டப்படுகின்றன.. ஆனால் உண்மையில் அமித்ஷாவை சந்தித்ததன் மூலமோ எத்தனையோ ஆதாயங்கள்- .லாபங்கள் கிடைக்கும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி ஸ்கெட்ச் போட்டே காய் நகர்த்தி சாதித்திருக்கிறார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
டெல்லியில் திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக இன்று டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும். அமித்ஷாவுடன் சுமார் 2 மணிநேரம் தமிழ்நாட்டு மக்கள் பிரச்சனைகள் குறித்துதான் பேசினோம் என்றார்.

எடப்பாடி பழனிசாமியின் ஸ்கெட்ச்சும் இத்தனை ஆதாயங்களும்
அரசியல் வட்டாரங்களோ அமித்ஷாவுடனான சந்திப்பு என்பது எடப்பாடி பழனிசாமியின் திட்டமிட்ட அரசியல் வியூகம்தான்; இந்த சந்திப்புக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கப் போகும் ஆதாயங்கள் எவ்வளவு தெரியுமா? என ஒரு நீண்ட பட்டியலே வாசிக்கின்றனர்.
1) அண்ணா திமுகவில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற குரல் அவ்வப்போது வெவ்வேறு முனைகளில் இருந்து கிளம்பி வருகிறது. தற்போதைய அமித்ஷா சந்திப்பின் மூலம் இந்த கூட்டணி நெருக்கடியில் இருந்து தப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
2) அண்மையில் திடீரென இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விஸ்வரூபம் எடுத்தது. இந்திய தேர்தல் ஆணையமே விசாரித்து முடிவெடுக்கலாம் என உத்தரவிடப்பட்டது எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கடியான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. தற்போது டெல்லியுடன் இணக்கத்தை காட்டி இருப்பதால் தேர்தல் ஆணைய சிக்கலில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி டீம் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
3) பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டது; கொல்லைப்புற கூட்டணியை உறுதி செய்துவிட்டது அதிமுக என்கிற திமுக கூட்டணி கட்சிகளின் விமர்சனத்தை சமாளிக்கும் வகையில், அமித்ஷாவிடம் தமிழ்நாட்டு நலன் சார்ந்த கோரிக்கைகள்- நீங்கள் (திமுக) என்ன கோரிக்கைகளுக்காக போராடியதோ- போராடுகிறதோ அதைத்தான் நாங்கள் நேரடியாக அமித்ஷாவிடம் சொன்னோம்; ஒரு பிரதான எதிர்க்கட்சியாக எங்கள் கடமையை செய்திருக்கிறோம் என்று சொல்லி தப்பிப்பதுடன், தமிழர் நலனுக்கான கட்சி என்ற இமேஜை தக்க வைப்பதும் எடப்பாடி பழனிசாமிக்கான இன்னொரு ஆதாயமாகும்.
4) தமிழக அரசியல் களத்தில் இனி அதிமுகவை பாஜக விமர்சிக்கவே விமர்சிக்காது என்ற நிலைமை உருவாகும். அப்படி அதிமுகவுக்கு எதிராக பாஜக மூச்சுவிட்டால் கூட்டணி உடைய தமிழக பாஜகதான் காரணம் என பழியை தூக்கி வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
5) இன்றைக்கு கட்சி தொடங்கிவிட்டு நாளைக்கு முதல்வராகிவிடுவோம் என்கிற கனவில் இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி வைக்கிறதா? அப்படியானால் அதிமுகவின் நிலைமை அவ்வளவு மோசமா? என்கிற விமர்சனங்களுக்கு இனி இடமே இல்லை. அதிமுக- தவெக கூட்டணி என்ற யூகங்கள் அனைத்துக்கும் அமித்ஷா சந்திப்பின் மூலமாக ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
6) கடந்த 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளை தேடி தேடி அதிமுக அலைபாய்ந்த பரிதாபம் இனி இல்லை; அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி அமையப் போகிறது; இதனை சாதித்து காட்டியவர் எடப்பாடி பழனிசாமி என்கிற இமேஜ் உருவாகித்தான் தீரும்.
7) இப்போதைக்கு திமுகவுக்கு எதிரான வாக்குகளை அதிமுக, பாஜக, நாதக, தவெக அனைத்து பல கட்சிகள் கூறுபோட்டுக் கொண்டே இருக்கின்றன. டெல்லி சந்திப்பின் மூலமாக, அதிமுக- பாஜக கூட்டணி பக்கம், திமுக எதிர்ப்பு வாக்குகளை திசை திருப்பி ஒருமுகப்படுத்தி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
8) திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து சிபிஎம், தவாக, விசிக உள்ளிட்டவை இணையலாம்,; திமுக கூட்டணியில் பாமக இடம்பெறலாம் என்றெல்லாம் ஆரூடம் கணிக்கப்பட்டு வந்தன. தற்போது பாஜக- அதிமுக கூட்டணியை உறுதி செய்திருப்பதன் மூலம், திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் இனி வெளியேற நினைக்காது; அதேபோல பாமக, தேமுதிக உள்ளிட்ட எந்த கூட்டணிக்கு போவது என தெரியாமல் தடுமாறும் கட்சிகள், ஒருசேர அதிமுக- பாஜக கூட்டணி ஜோதியிலேயே சங்கமமாகிவிடும்.
9) திமுக எதிர்ப்பு வாக்குகளை மிகவும் நம்பி இருக்கக் கூடியவர்கள் சீமானும் நடிகர் விஜய்யும். இந்த இருவரது எதிர்பார்ப்புகளையும் மெகா கூட்டணி அமைப்பதன் மூலம் தவிடு பொடியாக்கிவிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது பாஜகவுடனான கூட்டணியை அதிமுக கைவிடுவதற்கு தம்மால் முடிந்த அளவு கீழே இறங்கி பேச கூடிய நிலையை விஜய்யின் தவெகவுக்கு உருவாக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
10) டெல்லி மேலிடத்துடன் இணக்கம் என்பதே தமக்கு மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல அவருடன் இருக்கும் சகாக்களுக்கும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கும் பல வழக்குகளின் பிடியில் இருந்து நிம்மதி பெருமூச்சு விடுவதற்குதான் என்பது உலகம் அறிந்ததுதான்.
तमिलनाडु में वर्ष 2026 में NDA की सरकार बनते ही 'शराब की बाढ़' और 'भ्रष्टाचार की आँधी' थम जाएगी।
— Amit Shah (@AmitShah) March 25, 2025
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும். pic.twitter.com/GWopmm38Ty
இத்தனை ஆதாயங்களையும் கணக்குப் போட்டுதான் டெல்லிக்கு போனாராம் எடப்பாடி பழனிசாமி. ஆனால் டெல்லியிலோ அவருக்கு உடனே பழுத்த பழம் கிடைத்துவிடவும் இல்லைதான். பல மணிநேர தத்தளிப்பு, வெறுப்பு, விரக்திக்கு இடையேதான் டெல்லியில் சந்திப்புக்கான அனுமதியே எடப்பாடிக்கு கிடைத்ததாம். ஆனாலும் மேலே சொன்ன ஆதாயங்களுக்காக இத்தனையையும் பல்லை கடித்துக் கொண்டு டெல்லியில் வலம் வந்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக- பாஜக கூட்டணி சந்தித்த தேர்தல்களும் முடிவுகளும் என்ன?
1) 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக மதிமுக, ஜனதா கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் ராஜீவ் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தன. அத்தேர்தலில் அதிமுக 18; பாமக 4; பாஜக 3; மதிமுக 3; ஜனதா கட்சி 1; வாழப்பாடி ராமமூர்த்தியின் ராஜீவ் காங்கிரஸ் 1 என மொத்தம் 30 இடங்களை அதிமுக- பாஜக கூட்டணி கைப்பற்றியது.
2) 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 இடங்களையும் திமுக தலைமையிலான கூட்டணியே அள்ளியது. அதிமுக- பாஜக கூட்டணி பெரும் தோல்வியைத்தான் தழுவியது.
3) 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி போட்டியிட்டது. அதிமுக 66 இடங்களிலும் பாஜக 4; பாமக 5 என தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வென்றது; திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.












Click it and Unblock the Notifications