இறுதிக் கட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை .. மோடியை ஏப்.6-ல் சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான அதிமுக- பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன. தமிழ்நாட்டுக்கு வரும் 6-ந் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித் தனியே மதுரை விமான நிலையத்தில் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பங்கேற்க உள்ளது. அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலை,வர்கள் குழு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்திருந்தா அமித்ஷா. அத்துடன் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார் அமித்ஷா.
அத்துடன் அதிமுகவின் மூத்த தலைவர்கள் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்தும் பேசியிருந்தனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் சென்னை திரும்பிய அண்ணாமலை, தமிழக நிலைமை தொடர்பாக மேலிடத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது; தாம் பாஜகவின் தொண்டராக மட்டுமே செயல்படவும் தயார் என தெரிவித்துள்ளேன் என்றார். இதனால் அதிமுக கூட்டணிக்காக, தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம்; அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் பாம்பனில் புதிய ரயில்வே பாலம் திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 6-ந் தேதி வருகை தருகிறார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது அவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேச நேரம் கேட்டிருந்தனர். தற்போதைய தகவல்களின் படி இருவரையும் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றன அதிமுக, பாஜக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications